இந்தியா

காஷ்மீருக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை வரவழைத்திருக்கும் பாகிஸ்தான்: தகவல்

23rd Aug 2019 06:15 PM

ADVERTISEMENT


புது தில்லி: காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக, தங்களிடம் போதிய பயங்கரவாதிகள் இல்லாத நிலையில், ஆப்கானிஸ்தானிடம் இருந்து பாகிஸ்தான் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் லஷ்கர் - இ - மொஹம்மது அமைப்பைச் சேர்ந்த 15 பயங்கரவாதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தால், இந்தியாவில் போர்ப் பதற்றம் உருவாகியிருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்தியாவில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாகவும் உலக நாடுகள் நம்ப வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கடுமையாக பணியாற்றி வருகிறது.

ADVERTISEMENT

இதற்காக, ஆப்கானிஸ்தானில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வரவழைத்திருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே இதனை உறுதிபடுத்தும் வகையில், காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவில் புல்வாமா போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னெச்சரிக்கையைப் போல பயங்கரவாதிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் அன்று சொன்னதை நிரூபிக்கவே, ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT