இந்தியா

ஊழலை புரட்சியாக மாற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது: சிதம்பரம் விவகாரத்தில் பாஜக தாக்கு

23rd Aug 2019 01:24 AM

ADVERTISEMENT


ப.சிதம்பரம் விவகாரத்தில் ஊழலை புரட்சியாக மாற்ற காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவரைப் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்வதாக அந்தத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்து, பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான  முக்தார் அப்பாஸ் நக்வி, தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியது:
காங்கிரஸ் கட்சி எதிர்மறை மனநிலையுடன் செயல்படுகிறது. அக்கட்சியினர் ஊழலை ஒரு புரட்சியாக மாற்றியுள்ளனர். இதுவரை ஊழலுக்கு எதிரான புரட்சிதான் நடைபெற்றுள்ளது. இப்போதுதான் நாட்டிலேயே முதல் முறையாக ஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடைபெறுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்ட அமலாக்கத் துறைகள் தங்கள் பணியைச் செய்யும்; நீதிமன்றங்கள் தங்கள் பணியைச் செய்யும் என்று முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஊழலுக்கு காங்கிரஸ் ஆதரவு: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
ப.சிதம்பரத்துக்கு எதிரான நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் கூறுவது தவறு. இந்த விவகாரத்தை புலனாய்வு அமைப்புகளிடமும், நீதிமன்றங்களிடமும் விட்டு விடுவோம். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் மிகப்பெரிய ஊழலாகும். 


கடந்த 2004 முதல் 2014 வரை மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி ஊழல்மயமாக இருந்தது. நாட்டைக் கொள்ளையடிப்பது மட்டுமே காங்கிரஸாரின் ஒரே இலக்காக இருந்தது. அதனால்தான் அவர்களை சட்டம் தற்போது துரத்துகிறது.
இந்த விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்கிறது. ஆனால், ஊழல் செய்தவரைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தற்போது ஒற்றுமையுடன் செயல்படுகிறது. இதன் மூலம் அக்கட்சி ஊழலை ஆதரிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது தினந்தோறும் ஒரு ஊழல் நடைபெற்றது. தற்போது ஒவ்வொரு முறைகேட்டிலும் உண்மை வெளிவந்து கொண்டிருகிறது என்றார் ஜாவடடேகர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT