இந்தியா

உன்னாவ் விவகாரம்: உ.பி. காவலரின் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு நோட்டீஸ்

23rd Aug 2019 01:20 AM

ADVERTISEMENT


பாலியல் வன்கொடுமை புகார் அளித்த உன்னாவ் பதின்வயதுப் பெண்ணின் தந்தை உயிரிழந்தது தொடர்பான வழக்கில், தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதை எதிர்த்து, உத்தரப் பிரதேச காவலர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள மாகி காவல் நிலையத்தின் காவலர் அமீர் கான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், மனுதாரரான காவலரின் பணி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வது மட்டுமே. பதின்வயதுப் பெண்ணின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மூத்த காவல் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், அவர் மீது முதல் தகவல் அறிக்கையை மனுதாரர் பதிவு செய்தார். அதற்காக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டால், சம்பவம் நடந்தபோது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியும் நடக்கவில்லை. இதன் மூலம், மனுதாரர் மீது பொய்க் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகிறது என்றார்.
இதை ஆராய்ந்த நீதிபதி சச்தேவா, இந்த மனு தொடர்பாகப் பதிலளிக்கக் கோரி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்தச் சம்பவத்தின் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறும் சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பதின்வயதுப் பெண் ஒருவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பதின்வயதுப் பெண்ணின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக செங்கரின் சகோதரர் புகார் ஒன்றைத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பதின்வயதுப் பெண்ணின் தந்தை, காவலில் இருந்தபோது கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில், செங்கர், காவலர் அமீர் கான் உள்ளிட்ட 9 பேர் மீது தில்லி நீதிமன்றம் கடந்த 13-ஆம் தேதி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து அமீர் கான் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், என் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பதின்வயதுப் பெண்ணின் தந்தை உயிரிழந்ததற்கும், மனுதாரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT