ரயில் நிலையங்களில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை: அக்.2 -இல் அமலுக்கு வருகிறது

ரயில்கள், ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட நெகிழி பொருள்களுக்கு (பிளாஸ்டிக்) தடை விதிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் நிலையங்களில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை: அக்.2 -இல் அமலுக்கு வருகிறது


ரயில்கள், ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட நெகிழி பொருள்களுக்கு (பிளாஸ்டிக்) தடை விதிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தத் தடை, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழி பொருள்களின் பயன்பாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பயன்பாட்டுக்குத் தடையும் விதிக்கப்படுகிறது. 
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமாக விளங்கும் இந்தியன் ரயில்வே, நெகிழி பயன்பாட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட நெகிழி பொருள்களை பயன்படுத்த  தடை விதிக்கப்பட உள்ளது. இந்த தடை வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

ரயில்களில் தூக்கி எறியப்படும் காலி தண்ணீர் பாட்டில்களை பேண்ட்ரி ஊழியர்கள் சேகரித்து, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் நெகிழி மேலாண்மை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கட்டாயமாக நெகிழி பொருள்களை தவிர்க்க வேண்டும் என்றும், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் உணவகங்கள், நெகிழி மேலாண்மை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. 

முதல்கட்டமாக, 360 முக்கிய ரயில் நிலையங்களில், நெகிழி தண்ணீர் பாட்டில்களை நசுக்கும் 1,853 எந்திரங்கள் விரைவாக அமைக்கப்பட உள்ளன.   
இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நெகிழி கேரி பைகள் உபயோகத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். 
ரயில் நிலையங்களில் நெகிழி  பாட்டில்களை சிதைக்கும் இயந்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
நெகிழி பொருள்களுக்கான தடையை உறுதியாக பின்பற்ற வேண்டும். வரும் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பிறகு, நெகிழி பயன்பாடு முற்றிலும் அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com