இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்: இம்ரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தவிர்க்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்: இம்ரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்


இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தவிர்க்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினார். தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இம்ரான் கானிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாகவும் இந்தியா பிரித்தது. இந்தியாவின் இந்நடவடிக்கையால், அண்டை நாடான பாகிஸ்தானுடன் பதற்றம் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து  இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் பேசினார். பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை பேசினார். அப்போது டிரம்ப்பிடம், இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளை பாகிஸ்தான் தலைவர்கள் வெளியிட்டு வருவதாக மோடி தெரிவித்தார். மேலும், பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் மோடி வலியுறுத்தினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் டிரம்ப் திங்கள்கிழமை தொலைபேசி மூலம் பேசினார். இதுகுறித்து சுட்டுரையில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், எனது  நண்பர்களான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் பேசினேன். வர்த்தகம், ராஜீய கூட்டுறவு குறித்தும், முக்கியமாக இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடையேயான பதற்றத்தை தணித்துக் கொள்வது குறித்தும் அவர்களுடன் விவாதித்தேன். இக்கட்டான சூழ்நிலைதான். ஆனால் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் வெளியிடுவதை தவிர்ப்பது குறித்தும், பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பாகிஸ்தான் பிரதமருடன் அமெரிக்க அதிபர் பேசினார். நிலைமையை மேலும் மோசமாக்குவதை தவிர்க்கும்படியும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் டிரம்ப் வலியுறுத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகையின் முதன்மை துணை ஊடக செயலாளர் ஹோகன் கிட்லி கூறுகையில், பிராந்திய நிலவரங்கள் குறித்தும், அமெரிக்க-இந்திய  ராஜீய நட்புறவு குறித்தும் மோடியுடன் டிரம்ப் பேசினார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை தொடர்ந்து பேணுவது குறித்தும் டிரம்ப் எடுத்துரைத்தார். வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலமாக அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். விரைவில் சந்தித்துப் பேசவும் ஒப்புக் கொண்டனர் என்றார்.

டிரம்ப்பிடம் பாகிஸ்தான் வலியுறுத்தல்: காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு டிரம்ப் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று அவரிடம் இம்ரான் கான் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:
பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருந்தது. டிரம்ப்புடனான  தொலைபேசி உரையாடலில், காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் டிரம்ப்பும், அமெரிக்காவும் ஈடுபட வேண்டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தினார். காஷ்மீரில் மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்தியா நீக்க வேண்டும் என்று டிரம்ப்பிடம் இம்ரான் கான் கேட்டுக் கொண்டார். காஷ்மீரில் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு, அங்கு மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட வேண்டும் என இம்ரான் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச சமூகத்தால் பிரச்னைக்குரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா தன்னிச்சையாக நீக்கிக் கொண்டு விட்டதாகவும் டிரம்ப்பிடம் இம்ரான் கான் தெரிவித்தார் என்றார் ஷா மெஹ்மூத் குரேஷி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com