இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் அமைப்பு கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.


தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் அமைப்பு கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இடஒதுக்கீடு தொடர்பாக இணக்கமான சூழலில் ஆலோசனை நடத்த வேண்டும். அப்போது, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், எதிராகப் பேசுபவர்களின் மனநிலையையும், அதற்கு எதிராகப் பேசுபவர்கள், ஆதரவாகப் பேசுபவர்களின் மனநிலையையும் புரிந்துகொண்டு பேச வேண்டும் என்றார்.
அவரது கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் பறிக்க நினைக்கின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அவர்களின் மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டில் சூழ்ச்சியை ஏற்படுத்த பாஜக நினைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த வேண்டுமென ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது, மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். 
இது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தத் தேவையில்லை. அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள இடஒதுக்கீட்டை நீக்க முயல்வது, அநீதிக்கு ஒப்பானதாகும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவையில்லாத சர்ச்சை: இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கருத்து குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் அருண் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், இடஒதுக்கீட்டுக்கு அளித்து வரும் ஆதரவை ஆர்எஸ்எஸ் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளது. இடஒதுக்கீட்டு முறையில் காணப்படும் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கிலேயே மோகன் பாகவத் அவ்வாறு தெரிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய விஷயமாக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com