திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

நீதிமன்றத்தில் விரைவில் சரண்: அனந்த் சிங் எம்எல்ஏ

DIN | Published: 20th August 2019 01:43 AM


பிகாரைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்எல்ஏவும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்படுபவருமான அனந்த் சிங், நீதிமன்றத்தில் விரைவில் சரணடைய இருப்பதாக தெரிவித்தார்.
மொகாமா தொகுதி எம்எல்ஏ.வான அவர், விடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
கைது நடவடிக்கைக்கு நான் அஞ்சவில்லை. நோய்வாய்ப்பட்டுள்ள எனது நண்பரைக் காண வந்தேன். இன்னும் 3 அல்லது 4 நாள்களில் நீதிமன்றத்தில் சரணடைவேன்.
அதற்கு முன்பு நான் எனது வீட்டுக்குச் செல்வேன். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிப்பேன்.
நான் எனது மூதாதையரின் வீட்டுக்கு 14 ஆண்டுகளாக செல்லவில்லை. அப்படியிருக்கையில் அங்கு எப்படி ஏ.கே. 47ரக துப்பாக்கியை வைப்பேன்?
முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்துப் பேச முயன்றேன். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது என்று அந்த விடியோவில் பேசியுள்ளார்.
இதனிடையே, அனந்த்சிங் எம்எல்ஏவுக்கு சொந்தமாக பாட்னாவில் இருக்கும் இன்னொரு வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது குற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் சோட்டா சிங் என்பவர் அங்கு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து சோட்டா சிங்குக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக அனந்த் சிங் எம்எல்ஏ மீது தலைமைச் செயலக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாட்னா மாவட்டம், லாட்மா கிராமத்தில் உள்ள அனந்த் சிங்கின் மூதாதையர் வீட்டில் போலீஸார் அண்மையில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், ஏ.கே. 47 ரக துப்பாக்கி, துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. 
இதையடுத்து அனந்த் சிங் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், ஒப்பந்ததாரரை மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் விசாரணைக்கு வருமாறும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், அனந்த் சிங் எம்எல்ஏ தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் 12075 கிளார்க் வேலை
தேவைப்பட்டால் ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்யத் தயார்: ரஞ்சன் கோகாய்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
74 வயது குறைந்ததாக உணர்கிறேன், என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரம் குறித்து தான்: ப.சிதம்பரம்