வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சட்டத் திருத்தம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளில் திருத்தம்  கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சட்டத் திருத்தம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளில் திருத்தம்  கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், "வாக்காளர் அட்டை கோரி புதிதாக விண்ணப்பிப்போரிடம் இருந்தும், ஏற்கெனவே வாக்காளர் அட்டையை வைத்திருப்போரிடம் இருந்தும் ஆதாரை பெறும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆதார் விவரத்தைக் கோரும் அதிகாரத்தை வாக்காளர் சீட்டுப் பதிவு அதிகாரிக்கு அளிக்கும்  வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி வாக்காளர் அடையாள அட்டை பிரச்னைக்கு முடிவு கட்டவும், வாக்காளர் அட்டையை எந்தப் பிழையும் இல்லாமல் உருவாக்கும் வகையிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு ஒன்றில், உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவால் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. அப்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டுமெனில், அதற்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கோரி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆதார் எண்ணைப் பெறுவதற்கு சட்டத்தின் ஒப்புதல் அவசியம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதலால் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com