லடாக் பகுதிக்கு காங்கிரஸ் ஆட்சி முக்கியத்துவம் அளிக்காததாலேயே சீனப் படைகள் ஆக்கிரமித்தன 

மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசுகள், லடாக் பகுதிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத காரணத்தாலேயே டெம்சோக் பகுதி வரை சீனப் படைகள் ஆக்கிரமித்ததாக லடாக் தொகுதியின் பாஜக எம்.பி.யான  ஜம்யாங்
லடாக் பகுதிக்கு காங்கிரஸ் ஆட்சி முக்கியத்துவம் அளிக்காததாலேயே சீனப் படைகள் ஆக்கிரமித்தன 

மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசுகள், லடாக் பகுதிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத காரணத்தாலேயே டெம்சோக் பகுதி வரை சீனப் படைகள் ஆக்கிரமித்ததாக லடாக் தொகுதியின் பாஜக எம்.பி.யான  ஜம்யாங் சேரிங் நாம்கியால் குற்றம்சாட்டினார்.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது ஜம்யாங் சேரிங்கின் பேச்சு பலரையும் கவர்ந்தது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவரது உரையைப் பாராட்டினார்.

இந்நிலையில், ஜாம்யாங் சேரிங், லே நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாம் சீனாவை நோக்கி அங்குலம் அங்குலமாக நகர வேண்டும் என்பதை வலியுறுத்தும் முன்னேற்றக் கொள்கையை நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு உருவாக்கினார். ஆனால் அதை அமல்படுத்தியபோது அது பின்னோக்கிய கொள்கையாகி விட்டது. சீனப்படைகள் தொடர்ந்து நமது நிலப்பகுதிக்குள்  ஊடுருவின. நாம் தொடர்ந்து பின்வாங்கினோம். அக்சை சின் பகுதி முழுவதுமாக சீனக் கட்டுப்பாட்டுக்குள் சென்றதன் காரணம் இதுதான்.
மத்தியில் காங்கிரஸ் கட்சியின் 55 ஆண்டு கால ஆட்சியின்போது பாதுகாப்புக் கொள்கைகளில் லடாக்கிற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனாலேயே டெம்சோக் கால்வாய் பகுதி வரை சீனப் படைகள் ஆக்கிரமித்தன.
லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாறியுள்ளதால், பாதுகாப்பு கோணத்தில் நிலைமை எவ்வாறு மாறும்? என்று கேட்கிறீர்கள். இனி இந்தப் பகுதிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். முந்தைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் எல்லை கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். நரேந்திர மோடி அரசின் கீழ் எல்லைப் பகுதிகளுக்கு சாலைகள், தகவல் தொடர்பு வசதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெருநகரங்களைப் போன்ற வசதிகள் செய்து தரப்படும்.

காஷ்மீர் விவகாரத்துக்காக ஐ.நா. சபையை அணுகியதன் மூலம் காங்கிரஸ் ஒரு தவறை இழைத்தது. இரண்டாவதாக, காஷ்மீரில் நிலைமை மோசமாகும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் திருப்திப்படுத்தும் அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றியது. 

கடந்த காலங்களில், லடாக் பகுதிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை ஜம்மு-காஷ்மீர் அரசுகள் வேறு பயன்பாடுகளுக்கு திருப்பி விடுவது வழக்கம். காஷ்மீர் மாநிலத்துடன் இணைந்திருந்ததால் நாங்கள் (லடாக் பகுதியினர்) பல்வேறு சிரமங்களை அனுபவித்தோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com