தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் எடியூரப்பா

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் எடியூரப்பா

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மஜத மாநிலத் தலைவராக இருந்தவரும், பின்னர் அக் கூட்டணி ஆட்சி கவிழக் காரணகர்த்தாவாக இருந்தவருமான எச்.விஸ்வநாத், அண்மையில் அளித்திருந்த பேட்டியில்," கூட்டணி ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா,  பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தனது கட்டுப்பாட்டில் இருந்த உளவுத் துறை மூலம் தலைவர்களின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்காக, அவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன' என்று குற்றம்சாட்டியிருந்தார்.  

இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா வலியுறுத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கடுமையாக மறுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.  தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார், முன்னாள் உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.

இதனிடையே, இரண்டு நாள்கள் பயணமாக புது தில்லி சென்றிருந்த முதல்வர் எடியூரப்பா, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். அமித் ஷாவின் அனுமதியின்பேரில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியது: மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் முக்கியத் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட பல தலைவர்கள், இந்த விவகாரத்தை விசாரித்து,  உண்மையை வெளிக் கொண்டுவர  வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். எனவே, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிய  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி,  உண்மையை வெளியே கொண்டுவந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது என்றார் அவர்.

"எந்த விசாரணைக்கும் தயார்': இது குறித்து, தர்மஸ்தலாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், "தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நான் ஈடுபடவில்லை. சிபிஐ விசாரணை அல்லது வேறு ஏதாவது சர்வதேச விசாரணை போன்ற எந்த விசாரணையை வேண்டுமானாலும் நடத்தட்டும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் என் பெயர் ஏன் இணைக்கப்பட்டது என்பது எனக்கு தெளிவாகவில்லை. தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நான் ஈடுபட்டிருந்தால், அதற்காக நான் பயந்திருப்பேன். ஆனால், அப்படி எந்த பயமும் எனக்கில்லை' என்றார் அவர்.

முதல்வர் எடியூரப்பாவின் அறிவிப்பை வரவேற்றுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, "தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். ஆனால், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக விளங்கும் சிபிஐ கடந்த காலங்களில் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. இம்முறை அப்படி எந்த அரசியல் பழிவாங்கலிலும் ஈடுபடக் கூடாது' என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com