ஒரு தரப்பை திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதே தேசப் பிரிவினைக்கு காரணம்: அமித் ஷா

""துணிச்சலாக முடிவுகளை எடுக்காமல் ஒரு தரப்பை மட்டும் திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதுதான் தேசப் பிரிவினைக்குக் காரணம்; முஸ்லிம் பெண்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கிய "முத்தலாக்' இதுவரை
ஒரு தரப்பை திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதே தேசப் பிரிவினைக்கு காரணம்: அமித் ஷா

""துணிச்சலாக முடிவுகளை எடுக்காமல் ஒரு தரப்பை மட்டும் திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதுதான் தேசப் பிரிவினைக்குக் காரணம்; முஸ்லிம் பெண்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கிய "முத்தலாக்' இதுவரை நடைமுறையில் இருந்ததற்கும் அந்த வகை அரசியல்தான் காரணம்'' என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை சார்பில் "முத்தலாக் தடைச் சட்டம்-வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டது' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமித் ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

முத்தலாக் தடைச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், நமது நாட்டில் முஸ்லிம் பெண்களுக்கு இதுவரை இழைக்கப்பட்டு வந்த கொடுமைக்கு மத்திய அரசு முடிவு கட்டிவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், நான் இங்கு ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மத்திய அரசு எடுத்த நடவடிக்கை முழுமையாக முஸ்லிம் பெண்களின் நலனைக் காக்கும் நடவடிக்கைதான்.

நமது நாட்டில் பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. முத்தலாக் நடைமுறை மூலம் அவர்களுக்கு பெரும் தீங்கு நிகழ்த்தப்பட்டது. சில அரசியல் கட்சிகள் எவ்வித வெட்கமுமின்றி, முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அவர்களது எண்ணப்போக்கைப் பற்றி நினைக்கும்போது, அரசியல் ஆதாயத்துக்காக இவ்வளவு மோசமாக நடந்து கொள்ள வேண்டுமா என்று கேட்கத் தோன்றுகிறது.

மக்கள் நலன் சார்ந்த ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பும் வரவேற்க வேண்டும். ஆனால், சில எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தை வைத்தும் அரசியல் நடத்தி வருகின்றன. அரசியல் காரணங்களுக்காக சமூகத்தில் ஒரு தரப்புக்கு சாதகமாக நடப்பதும், சலுகைகளை அளிப்பதும் மோசமான செயல்.

ஒரு தரப்பை மட்டும் திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதே நமது தேசத்தின் பிரிவினைக்கு முக்கியக் காரணம். அப்போது முதல், பல இடங்களில் இதுபோன்ற தேச நலனுக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து வந்தன. வாக்கு வங்கி அரசியல் என்ற குறுகிய மனப்பான்மையுடன் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயலாகும். அரசியல் கட்சியின் நோக்கம் என்பது மக்களை சமூகப் பொருளாதார நிலையில் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கான தெளிவான தொலைநோக்குப் பார்வையும், திட்டமும் இருக்க வேண்டும். மேலும், மக்கள் நலனுக்காக கடுமையாக உழைக்கும் எண்ணமும் தீவிரமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட்டால் போதும் என்பவர்கள் மலிவான அரசியலில்தான் ஈடுபடுவார்கள்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக ஆட்சி அமைந்தபோது, ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. இப்போது 2019-ஆம் ஆண்டில் மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த உடன், அந்த வகையிலான தரமற்ற அரசியலுக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது என்றார் அமித் ஷா.

முஸ்லிம் பெண்களிடம் அவர்களது கணவர்கள் "தலாக்' என்று தொடர்ந்து மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. எனினும், இந்த முறை தொடர்ந்ததால், இதற்கு எதிராக சட்டமியற்ற மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்ட (முத்தலாக்கை தடை செய்யும்) மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியபோதும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது.

இதன்பிறகு சில திருத்தங்களுடன் 2018-ஆம் ஆண்டு மீண்டும் முத்தலாக் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பிறகு, கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com