ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

""பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது; ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டும்தான் இருக்கும்
ஹரியாணா மாநிலம், கால்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஜன் ஆசீர்வாத்' பிரசாரப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இப்பேரணி கால்காவில் தொடங்கி
ஹரியாணா மாநிலம், கால்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஜன் ஆசீர்வாத்' பிரசாரப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இப்பேரணி கால்காவில் தொடங்கி

""பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது; ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டும்தான் இருக்கும்'' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக சார்பில் "ஜன் ஆசீர்வாத்' பிரசாரப்  பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணியை கால்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துமெனில், அது அந்நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையாகத்தான் இருக்கும். வேறு எந்த விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனில், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதையும், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மக்களே, இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றார் அவர்.

அவரிடம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பதற்கு பாகிஸ்தான் கவலை தெரிவித்து வருவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ராஜ்நாத் சிங் அளித்த பதில்:

சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை பாகிஸ்தானை பலவீனப்படுத்தி விட்டது; இதனால்தான் அந்நாடு கவலையடைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டிடமும் இதில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பாகிஸ்தான் உதவிகோரி வருகிறது. இந்தியா என்ன குற்றம் செய்தது?

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவே, பாகிஸ்தானிடம் முகத்தில் அறைந்தாற் போல, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று தெரிவித்து விட்டது. பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை அழிக்கவும், சீர்குலைக்கவும் பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தச் சூழ்நிலையில், துணிச்சலான நமது பிரதமர், இந்தியா எத்தகைய துணிச்சலான முடிவுகளையும் எடுக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பாலாகோட் தாக்குதலை இம்ரான் ஒப்புக் கொண்டு விட்டார்: புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, நமது விமானப்படையிலுள்ள போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியிலுள்ள பயங்கரவாத முகாம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. பாலாகோட் தாக்குதல் நடைபெறவில்லை என்று ஆரம்பம் முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுத்து வந்தார். அப்படிப்பட்டவர் அண்மையில் பாலாகோட் தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் ஒப்புக் கொண்டு விட்டார்.

ரஃபேல் போர் விமானங்களின் கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அந்த விமானங்கள் இந்தியாவிடம் இருந்திருந்தால், பாலாகோட்டுக்கு நமது விமானப்படை விமானங்கள் செல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காது. நமது நாட்டில் இருந்து கொண்டே, அந்த பயங்கரவாதிகளை அழித்திருக்க முடியும்.

தேசத்தை கட்டமைக்கவே அரசியலுக்கு வந்துள்ளது பாஜக: "370-ஆவது பிரிவு மீது கை வைத்துவிட்டதால், நாடு பிளவுபடும்; பாஜகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது' என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அக்கட்சிகளுக்கு ஒன்று தெரிவிக்கிறேன்.  ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக பாஜக அரசியலுக்கு வரவில்லை. தேசத்தை கட்டமைக்கவே பாஜக அரசியல் செய்கிறது. எந்த சூழ்நிலையிலும் தேசத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுவதை எங்கள் கட்சி அனுமதிக்காது.

ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் அரசியலில் பாஜக ஈடுபடாது. இரு சமூகத்தினரையும் சகோதரர்களாகவே கட்சி நினைக்கிறது.  இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குவங்கி அரசியல் செய்வோரின் நோக்கம், ஆட்சியைப் பிடிப்பது மட்டும்தான் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com