முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்தும் பாதிப்புக்கு ஆளாகும் இஸ்லாமியப் பெண்கள்!

இஸ்லாமியப் பெண்களுக்கு தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்மகன்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. இதனால், முத்தலாக் விவகாரம் முடிவுக்கு வரும் என்று கருதப்பட்டது. 
முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்தும் பாதிப்புக்கு ஆளாகும் இஸ்லாமியப் பெண்கள்!

இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நடைமுறையை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக அறிவித்தும், அதில் எந்த மாற்றமும் நிகழவில்லை. மேலும், சிறு சிறு காரணங்களுக்காக மொபைல் அழைப்பு மூலமாகவோ, குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப், பேஸ் புக் மூலமாகவோ அல்லது மூன்றாவது நபர் மூலமாகவோ தலாக் கூறி விவாகரத்து செய்வது என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதைத்தொடர்ந்து, முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் முத்தலாக் தடை மசோதா கடந்த ஜூலை 30ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் ஒப்புதல் அளித்து, மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனால், முத்தலாக் தடை சட்டம் உடனடியாக நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதற்கு இஸ்லாமியப் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். 

ஏனென்றால், கணவன்- மனைவிக்கு இடையே சிறு சண்டைகளின் போது கூட, குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து சிறிதும் யோசிக்காமல் தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவன்மார்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் ஏராளம். எனவே, இந்த சட்டத்தை தங்களுக்கு கிடைத்துள்ள ஒரு சுதந்திரமாகவே இஸ்லாமியப் பெண்கள் கருதுகின்றனர். 

இந்தச் சட்டத்தின் மூலம், இஸ்லாமிய பெண்களுக்கு தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. இதனால், முத்தலாக் விவகாரம் முடிவுக்கு வரும் என்று கருதப்பட்டது. 

ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் ஷாம்லி என்ற மாவட்டத்தில் பெண்கள் பலர் முத்தலாக்கினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களில் இது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறும் போது, 'எனது கணவர் மொபைல் போனில் தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார். அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. அவர் என்னிடம் பேசிய அழைப்பை நான் சேமித்து வைத்துள்ளேன்.

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் என்னுடன் தான் உள்ளனர். அவர்களது தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. எனது வாழ்க்கை மட்டுமின்றி, எனது குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கான நீதி கிடைக்கவில்லை எனில் என்னை எரித்துக்கொள்வேன்" என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் தனது கணவரிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறினார். 

மற்றொரு பெண் பேசும் போது, 'நானும், எனது கணவரும் ஒரு வழக்கின் விசாரணைக்காக முதன்மை நீதிமன்றத்திற்கு சென்றோம். அங்கு ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் போது, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே, எனது கணவர் தலாக் கூறி விட்டுச் சென்று விட்டார்" என்றார். 

இதேபோன்று, திருமணத்தின் போது பேசிய வரதட்சணையை கொடுக்கவில்லை என்று பெண் ஒருவர் முத்தலாக் விவாகரத்து பெற்றுள்ளார். 

இது தொடர்பாக அம்மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், முத்தலாக் விவாகரத்து தொடர்பாக இதுவரை 35க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். 

மேலும், சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்கிறோம், நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறுகின்றனர். இதன் காரணமாகவே, நடவடிக்கையில் சற்று தாமதம் ஏற்படுகிறது என்று விளக்கம் தெரிவித்தார். 

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களோ, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுத்தால் மட்டுமே தங்களைப் போன்ற பெண்கள் இனிமேல் பாதிக்கப்படமாட்டார்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com