பிகார் நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கு: 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

பிகாரில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என போஜ்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே உள்பட மூவர்

பிகாரில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என போஜ்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே உள்பட மூவர் விடுவிக்கப்பட்டனர். 
சம்பவம் நடைபெற்ற 2015-ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்த சுனில் பாண்டே, தற்போது லோக் ஜனசக்தி கட்சியில் உள்ளார். 
இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு:  பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கிரிமினலான லம்பு சர்மா, கடந்த 2015-ஆம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அரா சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அவரை அழைத்து வந்தனர். அங்கிருந்து லம்பு சர்மாவை தப்பவைக்கும் முயற்சியாக அவரது கூட்டாளிகள் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். பெண் ஒருவர் தனது உடலில் வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டுவந்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். 
இந்த சூழலை பயன்படுத்தி லம்பு சர்மாவும், அவருடன் கைது செய்யப்பட்டிருந்த இரு கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பினர். தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அமித் குமார் என்ற காவலர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 
சம்பவம் தொடர்பாக, முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே உள்பட 11 பேருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி திரிபுவன் யாதவ் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லம்பு சர்மா, சந்த் மியான், நயீம் மியான், அகிலேஷ் உபாத்யாய, ரிங்கு யாதவ், பிரமோத் சிங், ஷியாம் வினய் சர்மா, முகமது வஹித் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். 
முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே, சஞ்ஜய் சோனார், விஜய் சர்மா ஆகிய மூவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 8 பேருக்கான தண்டனை மீதான வாதம் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி திரிபுவன் யாதவ் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com