அணு ஆயுதம் தொடர்பான இந்தியாவின் கருத்து துரதிருஷ்டவசமானது: பாகிஸ்தான்

அணு ஆயுதம் தொடர்பான இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து துரதிருஷ்டவசமானது என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
அணு ஆயுதம் தொடர்பான இந்தியாவின் கருத்து துரதிருஷ்டவசமானது: பாகிஸ்தான்

அணு ஆயுதம் தொடர்பான இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து துரதிருஷ்டவசமானது என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற எழுதப்படாத கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், மறைந்த பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உருவப்படத்துக்கு ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார். அப்போது ராஜ்நாத் சிங் பேசியபோது, முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை எதிர்காலத்தில் இந்தியா சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூடி விவாதம் நடத்திய நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பேசியதன் பொருள், நேரம் ஆகியவை மிகவும் துரதிருஷ்டவசமானது. இது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையையும், போரிடும் மனோபாவத்தையும் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதித்திருப்பது பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி. இதிலிருந்து காஷ்மீர் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.

"எத்தகைய சவாலையும் சந்திக்கத் தயார்': இதனிடையே, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலக நாடுகளின் கவனத்தை காஷ்மீர் விவகாரத்தில் இருந்து திசைதிருப்புவதற்காக இந்தியா போர் தொடுக்க வாய்ப்புள்ளது; எனினும் எத்தகைய சவாலையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் தேவையான படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com