பிகாரைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய சுயேச்சை எம்எல்ஏ அனந்த் சிங்கிற்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான இல்லத்திலிருந்து ஏகே-47 ரக துப்பாக்கியும், கையெறி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக பாட்னா ஊரகப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் கண்டேஷ் குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், மொகாமா தொகுதி எம்எல்ஏ அனந்த் சிங்குக்கு சொந்தமான அவரது மூதாதையர்கள் இல்லத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏகே- 47 ரக துப்பாக்கியும், அதற்குரிய தோட்டாக்களும், இரு கையெறி குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு, எம்எல்ஏ அனந்த் சிங்குக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏதேனும் சம்பவங்களில் அந்த ஏகே-47 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் அறியப்படவில்லை.
அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கண்டேஷ் குமார் மிஸ்ரா கூறினார்.
பார் துணைக் கோட்ட காவல்துறை அதிகாரி லிபி சிங் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சட்டப்படியும், உயரதிகாரிகளின் அறிவுரைப் படியும் செயல்பட்டு வருகிறோம். வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி, ஆதாரங்களுடன் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து எம்எல்ஏ அனந்த் சிங்கை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோர இருக்கிறோம்' என்றார்.
அனந்த் சிங் மறுப்பு: இதனிடையே, தனக்கெதிராக சதி நடப்பதாக எம்எல்ஏ அனந்த் சிங் கூறியுள்ளார். "முங்கேர் மக்களவைத் தொகுதி ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யான லல்லன் சிங்குக்கு சாதகமான வகையில், எனக்கு எதிராக இந்த சதி செய்யப்படுகிறது. எனது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் என்னுடையது அல்ல' என்றார்.
மக்களவைத் தேர்தலில் முங்கேர் தொகுதியில் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லல்லன் சிங் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வென்றார். அந்தத் தொகுதியில் அனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி காங்கிரஸ் கட்சி சார்பில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது. அனந்த் சிங் எம்எல்ஏவாக இருக்கும் மொகாமா பேரவைத் தொகுதியும் முங்கேர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.