இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 50,000 தொலைபேசி இணைப்புகள் மீண்டும் இயக்கம்

18th Aug 2019 02:14 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் துண்டிக்கப்பட்டிருந்த 50,000 தரைவழி தொலைபேசி இணைப்புகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பு கூறியதாவது:

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 35 காவல் நிலையங்களின் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை தளர்த்தப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தங்களது அலுவலகங்களுக்கு செல்ல ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. 17 தொலைபேசி தொடர்பகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 12 நாள்களுக்குப் பிறகு முதல்முறையாக 50,000 தரைவழி தொலைபேசி இணைப்புகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. அதாவது, ராஜ்பாக், ஜவஹர் நகர் போன்ற பகுதிகளில் தரைவழி தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டது. லால் சௌக், பிரஸ் என்க்ளேவ் போன்ற பகுதிகளில் தரைவழி தொலைபேசி சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

எனினும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு அரண்கள் அகற்றப்படாமல் அந்த இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தன. அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை சோதித்த பிறகே பொதுமக்களின்  நடமாட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. சிவில் லைன்ஸ் பகுதி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டத் தலைமை அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் தனியார் வாகனங்கள் சென்று வந்ததைக் காண முடிந்தது.

ADVERTISEMENT

சிவில் லைன்ஸ் பகுதியில் சில கடைகள் சனிக்கிழமை காலை திறந்திருந்தன. எனினும், பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களும், பிற வர்த்தக நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன.

ஜம்மு பிராந்தியத்தில் ஜம்மு, கதுவா, சம்பா, உதம்பூர், ரியாசி ஆகிய 5 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. இந்நிலையில், கிஷ்த்வார், தோடா, ராம்பன், பூஞ்ச், ரஜௌரி ஆகிய மேலும் 5 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தரைவழித் தொலைபேசி சேவை மீண்டும் இயங்கத் தொடங்கின. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்புநிலை மீண்டும் திரும்பியுள்ளது.

எனினும், இணையதளச் சேவை, செல்லிடப்பேசி இணையச் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டிருந்தது. கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தொடக்க நிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும்; அரசு அலுவலகங்களும் முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்' என்றார். அப்போது அவரிடம், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலையை கவனத்தில் கொண்டு அதுகுறித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT