இந்தியா

"ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்'

18th Aug 2019 02:15 AM

ADVERTISEMENT

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, அங்கு கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதளச் சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் கார்கில் வெற்றி நினைவு விளையாட்டு நிகழ்ச்சியை அமைச்சர் கிஷண் ரெட்டி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அவரிடம், காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் அங்குள்ள நிலைமையில் முன்னேற்றம் உள்ளது. 

ADVERTISEMENT

பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. ஜம்முவின் 5 மாவட்டங்களில் 2ஜி இணையச் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.  

கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் கருத்துகளை கூறி வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.

மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் இருப்பது குறித்த கேள்விக்கு, "காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்' என்றார் கிஷண் ரெட்டி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT