இந்தியா

சட்டப் பட்டதாரிகள் துறை சார்ந்த பணியை தேர்வு செய்யாததற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும்: ரஞ்சன் கோகோய்

18th Aug 2019 01:25 AM

ADVERTISEMENT

நீதித்துறையில் சிறப்பான வாய்ப்புகள் இருந்தும் சட்டப் பட்டதாரிகள் சட்டம் சார்ந்த பணியைத் தேர்வு செய்யாததற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார். 
தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்றபோது ரஞ்சன் கோகோய் பேசியதாவது: 
வழக்குரைஞர்களும், சட்ட ஆலோசகர்களும் தங்களது மனுதாரருக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்ய உதவுகின்றனர். மனுதாரர் சார்பாக ஆஜராகும் வழக்குரைஞர்கள், சட்டப் பிரிவுகளைக் கொண்டு தகுந்த முறையில் வாதாடி நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கு உதவுகின்றனர். இது நீதித்துறை தொடர்பாக எதிர்கால சந்ததியினர் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 
நல்ல வழக்குரைஞர்களையும், நீதிபதிகளையும், கல்வியாளர்களையும் உருவாக்குவதே சட்டப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமாகும். சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவே 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்கப்பட்டது. எனினும், தொடங்கப்பட்டதற்கான இலக்கை அந்தக் கல்விமுறை எட்டிவிட்டதா? என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது. 
இந்த சட்டப்படிப்பு எதிர்பார்த்த மாற்றத்தை முழுமையாக ஏற்படுத்தி விடவில்லை; அதேவேளையில், முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிடவும் இல்லை. 
5 ஆண்டு சட்டப் படிப்பு, சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர்களை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு படித்து வரும் சட்டப் பட்டதாரிகள் சட்ட உதவிகள் வழங்குவது, சட்ட அறிவை தெளிவுபடுத்துவதற்கான விரிவுரை, மன்றங்கள் ஆகியவற்றை நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. 
வழக்குரைஞர்களின் பணியையும், அவர்கள் செயலாற்றுவதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல், நீதித்துறையில் நல்ல வாய்ப்புகள் இருந்தும் சட்டப் பட்டதாரிகள் ஏன் சட்ட ரீதியான பணியை தேர்வு செய்வதில்லை? என்பதையும் ஆராய வேண்டியுள்ளது என்றார் ரஞ்சன் கோகோய்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT