இந்தியா

வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 70% இடஒதுக்கீடு: சட்டம் இயற்ற மத்தியப் பிரதேச அரசு முடிவு

16th Aug 2019 01:11 AM

ADVERTISEMENT


மத்தியப் பிரதேசத்தில் தொழில்துறை வேலைவாய்ப்பில் 70 சதவீதத்தை உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் கமல்நாத் தனது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ஆந்திரத்தில் தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்று அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. இப்போது, மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசும் அதேபோன்ற நடவடிக்கையை எடுக்க முடிவெடுத்துள்ளது.
தலைநகர் போபாலில் வியாழக்கிழமை தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதல்வர் கமல்நாத் பேசியதாவது:

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் முதலீடுகளை ஈர்க்க பல வழிகளில் அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 7 மாத ஆட்சியில் இதுவரை ரூ.6,158 கோடி முதலீடு மத்தியப் பிரதேசத்துக்கு கிடைத்துள்ளது. நமது மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யும் வகையில் தொழில்துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 70 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும்.
நமது மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் பெரிய பிரச்னைகள் ஏதுமில்லை. இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன. தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம்தான் அதிகஅளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். எனவே, தொழில்துறை முதலீடுகளை அரசு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. மாநிலத்தில் முதலீடு செய்வோருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன.
பால் வற்றிய பிறகு கைவிடப்படும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக மாநிலம் முழுவதும் 10,000 இடங்களில் பசுப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் கமல்நாத்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT