இந்தியா

வடகிழக்கில் அமைதியாக முடிந்தது சுதந்திர தினக் கொண்டாட்டம்

16th Aug 2019 01:14 AM

ADVERTISEMENT


வடகிழக்கு மாநிலங்களிலும், சிக்கிம் மாநிலத்திலும் சுதந்திர தினக் கொண்டாட்டம் வியாழக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம், நாடு முழுவதும் வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு கொண்டாடப்படும் முதல் சுதந்திர தின விழா என்பதால், கூடுதல் உற்சாகத்துடன் அதேசமயம் பலத்த பாதுகாப்புடனும் கொண்டாடப்பட்டது.
ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், மணிப்பூர், மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும், சிக்கிம் மாநிலத்திலும் சுதந்திர தின கொண்டாட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் சர்வானந்த சோனோவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அஸ்ஸாமில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்தற்கு தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
அருணாசலப் பிரதேசத் தலைநகர் இட்டா நகரில் விழாவில், முதல்வர் பெமா காண்டு மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து துணிச்சலான முடிவை மேற்கொண்டதன் மூலம், காஷமீர் மக்களை வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று பெமா காண்டு கூறினார்.
மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் கான்ராட் கே.சங்மா தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு தேசியப் பசுமை தீர்ப்பாயம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியிருப்பதன் மூலம் பூர்விகக் குடிகளின் நில உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மிஸோரம் தலைநகர் ஐசாலில் முதல்வர் ஸோரம்தங்கா, மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்த உதவும் சமூக-பொருளாதார வளர்ச்சிக் கொள்கையை அறிவித்தார். 
மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
நாகாலாந்தில் முதல்வர் நெபியூ ரியோ தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நாகாலாந்து பூர்விகக் குடிகளை அடையாளம் காண்பதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
சிக்கிம் மாநிலத்தில் முதல்வர் பிரேம் சிங் தமாங், மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்திருப்பதாக அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அடுத்தக்கட்டமாக, வடகிழக்கு மாநிலங்கள் அனுபவித்து வரும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். பின்னர் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நோக்கம் எதுவுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT