இந்தியா

முப்படைகளுக்கும் ஒரே தளபதி: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு

16th Aug 2019 04:38 AM

ADVERTISEMENT


ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எனக்கு நாட்டு நலன்தான் முக்கியமே தவிர, எனது அரசியல் எதிர்காலம் முக்கியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் மோடி ஆற்றும் முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 95 நிமிடங்களுக்கு நீடித்த அவரது உரை விவரம் வருமாறு:

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை உறுதிசெய்யவும், அவற்றுக்கு திறன்வாய்ந்த தலைமையை வழங்கவும் முப்படைத் தளபதி என்ற பதவியை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இது முப்படைகளும் ஒன்றாகப் பயணிக்க உதவும். இதன் மூலம் அவை தனித்தனியாகவும், ஒருங்கிணைப்பின்றியும் செயல்படாமல் தவிர்க்கப்படும். மாறி வரும் உலகுக்கேற்ப இந்தியாவும் தயாராக வேண்டியுள்ளது.
செல்வந்தர்கள் மீது மத்திய அரசு வரிகளை அதிகரித்து வருவதாக விமர்சனம் செய்யப்படுகிறது. செல்வத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும்.  செல்வம் உருவாக்கப்பட்டால்தான் அதை அனைவருக்கும் விநியோகிக்க முடியும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எனது அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது, நம்பிக்கையில்லாத சூழல் எவ்வாறு நம்பிக்கை தரும் சூழலாக மாறும் என்பதைக் காட்டுகிறது. எனது அரசின் முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கண்ட பின், நாடு சிறப்பாக மாறும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டதால் இது சாத்தியமானது. எனக்கு நாட்டு நலன்தான் முக்கியமே தவிர, எனது அரசியல் எதிர்காலம் முக்கியமல்ல என்று மோடி தெரிவித்தார்.

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்: அதன் பின், நீரின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் உள்ள வீடுகளில் பாதியளவு வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீருக்காக மக்கள் - குறிப்பாக பெண்கள்  மைல் கணக்கில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற, ஜல ஜீவன் திட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படும். 
இன்னும் சில வாரங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லாத நாடு இந்தியா என்று அறிவிக்க முடியும் என்று நம்புகிறேன். இதற்காக வலுவான பிரசாரத்தை முன்னெடுத்த மாநிலங்கள், கிராமங்கள், உள்ளாட்சிகள் ஆகியவையே இதற்குக் காரணம்.
இரண்டாவது முறையாக அமைந்துள்ள எனது தலைமையிலான அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றப் பாடுபடும். நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும். இது இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் (ரூ.359 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்துவது என்ற இலக்கை எட்ட உதவும்.
பாஜக அரசு சாமானிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுகிறது. குறிப்பாக கிராமப்புறங்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் நலவாழ்வை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இப்போது காலம் மாறி வருகிறது. 2014-19 காலகட்டமானது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நேரமாக இருந்தது. 
2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டமானது மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் நேரமாகும். இந்தியா 21ஆம் நூற்றாண்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு நாங்கள் செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
எனது அரசு பொறுப்பேற்று குறுகிய காலகட்டமான பத்து வாரங்களுக்குள் அரசியல்சாசனத்தின் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை வலுப்படுத்தியது, மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் செய்தது, முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் இருந்து அரசு நழுவிச் செல்வதில்லை. மத்திய அரசு முடிவுகளை எடுப்பதில் தாமதம் செய்வதில்லை. நாங்கள் பிரச்னைகளை வளர விடுவதும் இல்லை; அவை புரையோடிப் போக அனுமதிப்பதும் இல்லை. 
அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவு தொடர வேண்டும் என்று கூறும் கட்சிகள் அது அறிமுகமானது முதல் 70 ஆண்டுகளாக அப்பிரிவை ஏன் தற்காலிகப் பிரிவாகவே விட்டு வைத்திருந்தன? அது அவ்வளவு முக்கியமானது என்றால், அந்தச் சட்டப்பிரிவை தங்களுக்கு கிடைத்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அக்கட்சிகள் ஏன் நிரந்தரமானதாக மாற்றவில்லை? ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் அனைத்துத் துறை வளர்ச்சியை ஏற்படுத்த எனது அரசு உறுதிபூண்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரே தேசம் - ஒரே அரசியல்சாசனம் என்ற கனவு நனவாகியுள்ளது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல்சாசனத்தின் 370ஆவது பிரிவு நீக்கம் என்பது ஒரே தேசம் - ஒரே அரசியல்சாசனம் என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கையாகும். அந்த இலக்கு இப்போது எட்டப்பட்டு விட்டது. இதனால் தேசம் பெருமிதம் கொள்கிறது. இந்த விவகாரத்தில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. ஏனெனில் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 70 ஆண்டுகளில் விரும்பிய பலன்களை அளிக்கத் தவறிவிட்டது. அந்தப் பிராந்தியத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 

முத்தலாக் விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், வரதட்சிணை ஆகியவற்றுக்கு எதிராக நம்மால் நடவடிக்கை எடுக்க முடிந்தபோது, முத்தலாக்கிற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? 
பயங்கரவாதத்தை ஆதரித்து, பாதுகாத்து, ஏற்றுமதி செய்பவர்கள் (பாகிஸ்தான்) அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தின் ஒரே இலக்காக இந்தியா உள்ளது. வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் 19ஆம் தேதி 100ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

நாடு உச்சத்தை எட்ட மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரே தேசம் - ஒரே தேர்தல் என்பது பற்றி விவாதம் நடைபெற வேண்டும். அதேபோல் ஒரே தேசம் - ஒரே வரி என்ற நிலையை ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்துள்ளது.

சவாலாகும் மக்கள்தொகைப் பெருக்கம்: மக்கள்தொகைப் பெருக்கம் பல்வேறு சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. வருங்காலத் தலைமுறைகளுக்கு புதிய சவால்களை இது உருவாக்கும். குடிநீர்ப் பற்றாக்குறை, வன அழிப்பு, நிலச் சீர்கேடு, வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கு மக்கள்தொகைப் பெருக்கமே காரணம். இதைச் சமாளிக்க மத்திய மாநில அரசுகள் திட்டங்களைத் தொடங்க வேண்டியது அவசியம். குடும்பங்களை சிறிதாக வடிவமைத்துக் கொள்வது தேசபக்தி சார்ந்த செயலாகும்.
இந்தியர்களின் வாழ்வில் ஊழல் என்பது கரையான்களைப் போல் ஊடுருவியுள்ளது. 
அதைத் தோற்கடிக்க மத்திய அரசு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலை ஒழிப்பதில் இந்தியா ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. எனினும், இந்த நோய் மிகவும் ஆழமாகப் பரவியுள்ளதால் அதை ஒழிக்க அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் மோடி.

6ஆவது சுதந்திர தின உரை: வெள்ளை நிற குர்தாவும், பல வண்ண தலைப்பாகையும் அணிந்து மோடி, செங்கோட்டைக்கு வந்திருந்தார். தொடர்ந்து 6ஆவது முறையாக அவர் ஆற்றியுள்ள சுதந்திர தின உரை இதுவாகும். ஏற்கெனவே, பாஜகவைச் சேர்ந்த மறைந்த மூத்த தலைவரான வாஜ்பாய் பிரதமர் என்ற முறையில் 6 முறை தேசியக்கொடியை ஏற்றியுள்ளார். அந்தச் சாதனையை அதே கட்சியைச் சேர்ந்த மோடி தற்போது சமன் செய்துள்ளார்.  

முக்கிய அம்சங்கள்
*  அனைத்து குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்
*  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்
*  ஒரே தேசம் - ஒரே அரசியல் சாசனம் என்ற கனவு நனவாகியுள்ளது
*  கரையான் போன்ற ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறோம்
*  ஜம்மு-காஷ்மீரில் அனைத்துத் துறை வளர்ச்சி ஏற்படுத்தப்படும்
*  மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டங்களைதொடங்க வேண்டும்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT