இந்தியா

இந்திய வீரர்களைக் கொன்றதாக பாகிஸ்தான் கூறுவது பொய்யானது: ராணுவம்

16th Aug 2019 01:15 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலின் மூலம் இந்திய வீரர்கள் 5 பேரைக் கொன்றதாக பாகிஸ்தான் கூறியது பொய்யான தகவல் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 
முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான்-இந்தியா இடையே பரஸ்பரம் தாக்குதல் நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இந்தியத் தரப்பில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து பாகிஸ்தானின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் இந்தியா தனது தாக்குதலை அதிகரித்துள்ளது. 
இதனால் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பதுங்கு குழிகள் சேதமடைந்துள்ளன. இருதரப்பிலும் தாக்குதல் தொடர்கிறது என்று கூறியிருந்தார். 
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் கூறும் தகவல்கள் பொய்யானவை. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் எந்தவொரு தவறான நடவடிக்கைகளுக்கும், தக்க பதிலடி கொடுக்கத் தயார் நிலையில் இந்தியா உள்ளது என்றார். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராஜீய ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பாகிஸ்தான், எல்லைப் பகுதியில் அத்துமீறிய தாக்குதலையும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT