சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

மொத்தவிலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் ஜூலையில் சரிவு

DIN | Published: 15th August 2019 12:50 AM


மொத்தவிலைக் குறியீட்டு எண் (டபிள்யூ.பி.ஐ.) அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூலை மாதம் 1.08 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவான அளவாகும்.
இது தொடர்பான அறிக்கையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மொத்தவிலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5.27 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், தற்போது 1.08 சதவீதமாக இது குறைந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பணவீக்கம் 0.9 சதவீதமாக இருந்தது.
மொத்தவிலைக் குறியீட்டு எண் அளவீட்டில் 15 சதவீதப் பங்கு வகிக்கும் உணவுப் பொருள்களின் பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில் 6.15 சதவீதமாகக் குறைந்தது. இது, கடந்த ஜூன் மாதத்தில் 6.98 சதவீதமாக இருந்தது. உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கான காரணமாகும்.
அதே வேளையில், பழங்களின் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிசக்திக்கான பணவீக்கமும், கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த மாதம் குறைந்து காணப்பட்டது. தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 0.94 சதவீதமாகக் காணப்பட்டது. இது கடந்த மாதத்தில் 0.34 சதவீதமாகக் குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், அத்தியாவசியப் பொருள்களின் விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படாமல் உள்ளதால், பணவீக்கமும் மந்தநிலையிலேயே காணப்படுகிறது. சில மாதங்களுக்கு இதே நிலையே தொடர்ந்தாலும், இது தற்காலிகமானது என்றே கருதுகிறோம். உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்: அரசியல் செய்கிறார் ராகுல்- ஆளுநர் சத்யபால் மாலிக்    
ஜேட்லியின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு: வெங்கய்ய நாயுடு இரங்கல்
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மட்டுமல்ல.. அருண் ஜேட்லியின் சாதனைகள் பல!
மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்: பிரதமர் மோடி புகழஞ்சலி
காங்கிரஸை விமர்சித்த ஜேட்லியின் கடைசி ட்வீட் என்ன தெரியுமா?