எந்த நிபந்தனையுமின்றி வரத் தயார்; எப்போது வரட்டும்?- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் கேள்வி

காஷ்மீர் ஆளுநரின் அழைப்பை ஏற்று எந்த நிபந்தனையுமின்றி தான் அங்கு வரத் தயாராக இருப்பதாகவும், எப்போது வர வேண்டும்? என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 
எந்த நிபந்தனையுமின்றி வரத் தயார்; எப்போது வரட்டும்?- காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் கேள்வி

காஷ்மீர் ஆளுநரின் அழைப்பை ஏற்று, எந்த நிபந்தனையுமின்றி தான் அங்கு வரத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன்,  தான் எப்போது வர வேண்டும்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு அசாதாரண சூழல் நிலவி வந்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து, ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்த போது, 'ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். நேரடியாக வந்து உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும்' என்றார்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கு பதில் அளிக்கும் விதமாக  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை பார்வையிட வருமாறு நீங்கள் அழைப்பு விடுத்துள்ளதை மனதார ஏற்றுக்கொள்கிறேன். நானும், எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அப்பகுதிகளை பார்வையிட ஆவலாக உள்ளோம். அதற்காக நீங்கள் எனக்கு விமானம் எதுவும் தர வேண்டாம். மாறாக, அப்பகுதி முழுவதும் சென்று பார்வையிடவும், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ராணுவ பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களை சந்தித்து பேசவும் முழு சுதந்திரம் வழங்கினால் போதுமானது' என்று பதிவிட்டிருந்தார். 

ஆனால் , 'ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர்களை அழைத்து வருவேன் என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்து, காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி பிரச்னையை உருவாக்க நினைக்கிறார்' என ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார். 

இதன் தொடர்ச்சியாக இன்று(புதன்கிழமை) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உங்களது பலவீனமான பதிலை பார்த்தேன். உங்களது அழைப்பை ஏற்று எந்த நிபந்தனையுமின்றி நான் காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் எப்போது வர வேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com