மகாராஷ்டிரத்தில் வெள்ளம்: 4 லட்சம் பேர் வெளியேற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் வெள்ளம்: 4 லட்சம் பேர் வெளியேற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அந்த மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் 69 தாலுகாக்களும், 761 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளிலிருந்து 4.24 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்கியமாக, கோலாப்பூர் மற்றும் சாங்லி மாவட்டங்களிலிருந்து மட்டும் 3.78 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்திலிருந்து கூடுதல் கடற்படை வீரர்களும் மீட்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, வெள்ளம் பாதித்த சாங்லி மாவட்டத்தின் பகுதிகளை மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநிலத்தில் பெய்த மழைப்பொழிவின் அளவானது முற்றிலும் எதிர்பாராதது ஆகும். கடந்த 2005-ஆம் ஆண்டு பெய்த மழையை விட இரண்டு மடங்கு மழை தற்போது பெய்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு சாங்லி மாவட்டத்தில் பெய்த மழை அளவானது, வழக்கமான மழையை விட 217 சதவீதமும், கோலாப்பூர் மாவட்டத்தில் 159 சதவீதமும் அதிகமாக இருந்தன. இந்த அளவானது தற்போது சாங்லி மாவட்டத்தில் 758 சதவீதமும், கோலாப்பூர் மாவட்டத்தில் 480 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதிலும், 9 நாள்களில் இந்த அளவிலான கனமழை பெய்துள்ளது.

முதல்கட்ட ஆய்வின்படி, வெள்ளம் காரணமாக 27,468 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களும், 484 கி.மீ. தொலைவிலான சாலைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றார் ஃபட்னவீஸ்.

வடியும் வெள்ளநீர்: இந்நிலையில், மாநிலத்தில் பெய்து வந்த கனமழை சனிக்கிழமை ஓய்ந்ததையடுத்து, கோலாப்பூர், சாங்லி உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியது. இருந்தபோதிலும், வெள்ளநீர் முழுவதும் வடிவதற்கு 2 முதல் 3 நாள்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, மழை நிவாரணப் பொருள்கள் அடங்கிய பையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் படம் இடம்பெற்றுள்ளதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தனஞ்சய் முண்டே கூறுகையில், ""பாஜக தலைமையிலான அரசு சுயநலம் கொண்ட அரசாக மாறிவிட்டது. மக்களுக்கு நிவாரணப் பொருள்களை விரைவாக வழங்க கவனம் செலுத்தாமல், முதல்வரின் படத்தை பைகளில் ஒட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com