பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யும் முன்பு, அங்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர்.  இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கியிருந்து பணியாற்றிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது அங்கிருந்து தொடர்ந்து வெளியேறி  வருகின்றனர். தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக ஜம்மு, உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கையில் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 5 நாள்களில் மட்டும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள், ரயில்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிகார் மாநிலம் தர்பங்காவுக்கு செல்வதற்கு ரயிலுக்காக காத்திருந்த தொழிலாளர் ரமேஷ் குமார் என்பவர் கூறுகையில், "கடந்த 2 நாள்களாக எதுவும் சாப்பிடவில்லை. நான் பணியாற்றிய ஐஸ் கிரீம் தயாரிப்பு ஆலை உரிமையாளர் எனது சம்பளத்தை அளிக்காததால் போதிய பணம் என்னிடம் இல்லை. வாடகைக் கார் ஓட்டுநர்களும் ஒரு நபருக்கு ரூ.2,000 வாங்குகின்றனர்' என்றார்.

ஸ்ரீநகரில் 10 ஆண்டுகளாக தங்கநகைத் தொழில் செய்து வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், "காஷ்மீரில் இருந்து ஜம்மு வருவதற்கு எனது குடும்பத்தினர் 6 பேருக்கும் தலா ரூ.2,500 கொடுத்தேன்' என்றார்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மொராதாபாதை சேர்ந்த ஜபருல்லா கூறுகையில், "நான் வேலை பார்த்த இடத்தின் உரிமையாளர் ஒரு மாத சம்பளத்துக்குப் பதிலாக ஒரு வார சம்பளத்தைத்தான் அளித்தார். இவ்வாறு நடப்பது இதுதான் முதல் முறை. இதனால் கடன் வாங்கிக் கொண்டு செல்கிறேன்' என்றார்.

வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், "வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். ஏற்கெனவே இயக்கப்படும் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com