சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை அக்கட்சியின் செயற்குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
சோனியாவே மீண்டும் தலைவர்: காங்கிரஸ் செயற்குழு முடிவு

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை அக்கட்சியின் செயற்குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி கடந்த மே 25-ஆம் தேதி விலகினார். இதையடுத்து, புதிய தலைவர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் செயற்குழு தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா, அகமது படேல், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆஸாத், மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, தனது ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, ராகுலிடம் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக வலியுறுத்தினர். ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.  

இதையடுத்து, கட்சியின் மாநிலத் தலைவர்கள், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. நாட்டில் வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக, காங்கிரஸ் செயற்குழு ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டது.

ஆலோசனையிலிருந்து விலகல்: இதனிடையே, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்து, சோனியாவும், ராகுலும் வெளியேறினர். 

இதுதொடர்பாக சோனியா கூறுகையில், "நாங்கள் இருவரும் ஏற்கெனவே கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளோம். எனவே, எங்களது கருத்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனையிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்தோம்' என்றார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், அம்பிகா சோனி, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் ஆகியோர் அடங்கிய குழு, வடகிழக்கு பகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய், முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ஆகியோர் அடங்கிய குழு, கிழக்கு பகுதி நிர்வாகிகளிடமும்; பிரியங்கா, ஜோதிராதித்ய சிந்தியா, ப.சிதம்பரம் ஆகியோர் அடங்கிய குழு, வடக்குப் பகுதி நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தியது. 

குலாம் நபி ஆஸாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோர் மேற்குப் பகுதி நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். மன்மோகன் சிங், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் ஆகியோர் கொண்ட குழு, தெற்கு பகுதி நிர்வாகிகளின் யோசனைகளை கேட்டறிந்தது. தில்லிக்கு நேரில் வர முடியாதவர்களிடம் தொலைபேசி மூலம் இக்குழுவினர் கருத்துகளை கேட்டனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

"ராகுல் தொடர வேண்டும்': இந்த ஆலோசனையின்போது, கட்சியின் மாநிலத் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ராகுல்தான் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், தலைவர் பதவியில் ராகுல் நீடிக்காவிட்டால், கட்சி வலுவிழந்துவிடும். 

முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகவும் வாய்ப்புள்ளது. எனவே, ராகுல் காந்தியை பிரியங்கா சமரசம் செய்ய வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தினர் என்று தெரிவித்தன.

இதனிடையே, 5 குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில், காங்கிரஸ் செயற்குழு சனிக்கிழமை இரவில் மீண்டும் ஆலோசனை நடத்தியது. இரவு 11 மணி தாண்டியும் இக்கூட்டம் நீடித்தது. முடிவில் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், ராகுல் காந்தியின் ராஜிநாமாவும் ஏற்கப்பட்டது.

இறுதி முடிவு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கே..: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கே.சி.வேணுகோபால், கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அப்போது, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். மேலும், "காங்கிரஸ் கட்சியின் அரசமைப்புச் சட்டப்படி, செயற்குழு இடைக்கால தலைவரையே தேர்வு செய்யும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே, முழு நேர தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது' என்றனர்.

எனினும், செயற்குழுவின் முடிவையே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் உறுதி செய்யும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்பு, கடந்த 1998 முதல் 2017ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்திருந்தார்.

தேர்தல் தோல்வியும், ராஜிநாமாவும்...: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை.

80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். ராகுலின் தோல்வி, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். 

ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. ராகுல் தனது முடிவை கைவிட வேண்டும் என்று பல்வேறு மூத்த தலைவர்களும் தொண்டர்களும் வலியுறுத்தினர். ஆனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தார்.

அடுத்த தலைவராக தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் பெயரையும் பரிசீலிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 தீர்மானங்கள்

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்வு செய்யும் வரையில், இடைக்கால தலைவர் பொறுப்பை வகிக்கும்படி சோனியா காந்தியை வலியுறுத்தி முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவராக மிக சிறப்பாக செயல்பட்டமைக்காக, ராகுல் காந்திக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், "காங்கிரஸ் கட்சியை மிகுந்த உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் ராகுல் காந்தி வழிநடத்தினார். மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றதன் மூலம் அரசியல் வாழ்வில் பொறுப்புடைமைக்கு புதிய அளவுகோல்களை அவர் நிர்ணயித்திருக்கிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்கு வெளிப்படையான முறையில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com