கேரள மழை பலி எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் கனமழை தொடர்ந்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57-ஆக அதிகரித்துள்ளது. 1.25 லட்சம் பேர் நிவாரண முகாம்களில்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.

கேரளத்தில் கனமழை தொடர்ந்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57-ஆக அதிகரித்துள்ளது. 1.25 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால், 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன; பெரும்பாலான நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக, மலப்புரம், கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதுமுள்ள 1,111 நிவாரண முகாம்களில் 1.25 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்மழை காரணமாக மாநிலத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால், அணைகள் எந்நேரத்திலும் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வயநாடு மாவட்டத்திலுள்ள பனசுராசாகர் அணை சனிக்கிழமை பிற்பகலில் திறக்கப்பட்டது. இதையடுத்து, கபினி நதியின் கரையோரங்களில் வாழும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது. 
எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
வெள்ளம் காரணமாகவும், தண்டவாளங்களில் மரங்கள் விழுந்த காரணத்தினாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான ரயில் சேவைகளை தென்னக ரயில்வே சனிக்கிழமை ரத்து செய்தது.
மீட்புப் பணிகளில் தொய்வு: வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், புத்துமலை என்னும் குன்று தரைமட்டமான விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்மழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தப்பட்டன. சனிக்கிழமை காலை மீட்புப் பணிகள் தொடர்ந்தன. நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் குடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 
மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதே பகுதியில் சனிக்கிழமை மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 
கடும் நடவடிக்கை: வெள்ளநிலைமையை சனிக்கிழமை ஆராய்ந்த முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""வெள்ளம் குறித்து சிலர் தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவற்றை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.
கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட இருப்பதாகத் தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதியுதவி பெற்று, சிறிது சிறிதாக கேரளம் மீண்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு முதல் விமான சேவைகள்: கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விமானச் சேவைகளை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளதாக கொச்சி விமான நிலையம் அறிவித்துள்ளது.   
இது தொடர்பாக, விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், ""விமான நிலையம் தயாராகிவிட்டது. விமானச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தொடங்கும். இது தொடர்பாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
கேரளம் செல்ல...: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கேரள மாநிலத்துக்குச் செல்வோர், தகுந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் தனது நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது. 
இது தொடர்பாக, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், "கேரளத்துக்குப் பயணம் செய்வோர், திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம், அவர்களின் பாதுகாப்பைத் தகுந்த முறையில் உறுதிசெய்ய முடியும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com