காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானின் முயற்சிக்கு சர்வதேச நாடுகளிடம் சிறிதளவே ஆதரவு

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடங்கியுள்ள மிகப்பெரிய முயற்சிக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து குறைந்த அளவே ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ravish-kumar
3ravish-kumar

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடங்கியுள்ள மிகப்பெரிய முயற்சிக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து குறைந்த அளவே ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தை வைத்து பாகிஸ்தானில் அரசியல் நடப்பதால், இந்தியாவுக்கு பதிலடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.
ஆனால், ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அந்த மாநில பிரச்னை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான முன்னணி தலைவர்கள், சர்வதேச நாடுகளின் தலைவர்களைத் தொடர்புகொண்டு தங்களுக்கு ஆதரவு திரட்ட முயன்று வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வாஷிங்டனிலும், நியூயார்க்கிலும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து காஷமீர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெள்ளிக்கிழமை கூறுகையில்,  "காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து சர்வதேச நாடுகளிடம் பீதியான சூழலை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் விரும்புகிறது. எவ்வித போர்ப் பதற்றமும் இல்லை என்பது சர்வதேச நாடுகளுக்குத் தெரியும். இது பாகிஸ்தானின் தந்திரச் செயல். இப்போது போர் குறித்துப் பேச பாகிஸ்தானுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை' என்றார்.
இதனிடையே, பாகிஸ்தானின் முயற்சிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த தூதரக அதிகாரிகள் இருவர் கூறியதாவது:
எல்லை தாண்டிய ஊடுருவல்களுக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது  பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் சீர்குலைந்து விடும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை பாகிஸ்தான் உறுதிசெய்ய வேண்டும். 
பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவிப்பதை தடுப்பதற்கு அமெரிக்காவும் இதர நாடுகளும் முயன்று வருகின்றன. பயங்கரவாதத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்று பாகிஸ்தான் தலைவர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. 
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பது தடுக்கப்படவில்லை என்றால் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க சர்வதேச நிதிசார் நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. 
பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. மொத்தத்தில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் மிகக் குறைந்த அளவே ஆதரவு கிடைத்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com