காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி மனு

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி மனு

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய மாநாடு கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் மக்களின் கருத்தை அறியாமலேயே அவர்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தேசிய மாநாடு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான முகமது அக்பர் லோன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவில் சில அம்சங்களை நீக்கி, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், அந்த மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமும், அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவும், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளன. 
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமும், அச்சட்டத்
துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.
சமஸ்தானமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்தபோது அமைதியையும், ஜனநாயகத்தையும் உறுதிசெய்யும் விதமாக, நன்கு பரிசீலிக்கப்பட்ட பிறகே அரசமைப்புச் சட்டத்தில் 370-ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது. அது, நிரந்தரமான சேர்க்கைதான். ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் கருத்தைக் கேட்காமலேயே அவர்களின் உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது என்று அந்த மனுவில் தேசிய மாநாடு கட்சி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். 
அதன்படி, இரு யூனியன் பிரதேசங்களும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 565 சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு பாடுபட்ட நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான வரும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கட்டுப்பாடு:  உச்சநீதிமன்றத்தில் மனு
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினசரி பத்திரிகை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாசின் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
காஷ்மீரிலும், ஜம்முவில் சில மாவட்டங்களிலும் கடந்த 4-ஆம் தேதிக்குப் பிறகு தொலைபேசி, செல்லிடப்பேசி இணையதளச் சேவை என அனைத்து விதமான தகவல் தொடர்புகளும் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 
இதனால், பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடிவில்லை. எனவே, பத்திரிகையாளர்களும், இதர ஊடகத்தினரும் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இடையூறாக உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று அனுராதா பாசின் அந்த மனுவில் கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com