பலத்த மழையால் காவிரியில் 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து சனிக்கிழமை கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து காவிரியில் 2 லட்சம் கனஅடி நீர் வருகிறது.
கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக சனிக்கிழமை மாலை 60 அடியை தாண்டிய மேட்டூர் அணை.
கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக சனிக்கிழமை மாலை 60 அடியை தாண்டிய மேட்டூர் அணை.

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து சனிக்கிழமை கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து காவிரியில் 2 லட்சம் கனஅடி நீர் வருகிறது.

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  மேலும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 73,284 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால்,  சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,52,499 கன அடியாக அதிகரித்தது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த உயரம் 124.80 அடியாகும். தற்போதைய நீர்மட்டத்தின் அளவு 115 அடியாக உள்ளது.  இதன் காரணமாக, அணையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 42,341 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றுப்படுகை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கபினி: மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை வட்டத்தில் கபிலா நதியின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு வெள்ளிக்கிழமை நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக இருந்தது.  சனிக்கிழமை இதன் அளவு விநாடிக்கு 1,06,404 கன அடியாக உயர்ந்துள்ளது.  கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம்,  வயநாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபினி அணையின் மொத்த உயரம் (கடல்மட்ட அளவு) 2,284 அடியாகும். தற்போதைய நீர்மட்டத்தின் அளவு 2282.61 அடியாக உள்ளது. சனிக்கிழமை அணையில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மொத்தம் விநாடிக்கு 1,62,341 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஹாரங்கி அணைக்கு விநாடிக்கு 18,560 கன அடி நீர் வந்து கொண்டிருக்க,  விநாடிக்கு 16,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு விநாடிக்கு 1,13,435 கன அடி நீர் வந்துகொண்டிருக்க, விநாடிக்கு 50,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது தமிழகத்துக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல,  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, கிருஷ்ணா நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால்,  வட கர்நாடகத்தின் மிகப் பெரிய அணைகளான அல்மாட்டி, நாராயணபுரா ஆகியவற்றில் நீர்வரத்து பெருகியுள்ளது.  அணையின் கொள்ளளவை முழுமையாக அடைந்துவிட்டதால், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. 

நாராயணாபுரா அணைக்கு விநாடிக்கு 5.5 லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.  அதில் இருந்து ரூ.5.4 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அல்மாட்டி அணைக்கு விநாடிக்கு 5.15 லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்ததால்,  5 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இவை தவிர,  வட கர்நாடகத்தின் லிங்கனமக்கி, சூப்பா, வராஹி, பத்ரா, துங்கபத்ரா, கட்டபிரபா, மலபிரபா போன்ற அணைகளும் நீர்வரத்தால் ததும்பி வருகின்றன.  இந்த அணைகளின் நீர்மட்டம் ஒரு சில நாள்களில் அதன் முழுக் கொள்ளளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com