திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் தடை உத்தரவு நீக்கம்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு

DIN | Published: 11th August 2019 01:01 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற குழந்தைகள். 

ஜம்மு-காஷ்மீரின் ஐந்து மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு அண்மையில் எடுத்தது. இதையடுத்து ஜம்முவின் 10 மாவட்டங்களில் கடந்த 5ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மூத்த அரசு அதிகாரி ஒருவர், ஜம்முவில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியது:

ஜம்மு, கதுவா, சம்பா, உதம்பூர், ரியாசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் அனைத்கது விதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இந்த மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களும் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
ஐந்து மாவட்டங்களில் கடந்த 5ஆம் தேதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது முதல் இங்கு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை. தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.
ஐந்து மாவட்டங்களிலும் கடைகள் மற்றும் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் வழக்கம் போல் நடைபெறுகிறது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தப் பகுதியில் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடைபெற்றது. எனினும்,  பூஞ்ச், ரஜௌரி, ராம்பன் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
கிஷ்த்வார் மாவட்ட வளர்ச்சி ஆணையர் அங்கிரேஸ் சிங் ராணா கூறுகையில், "கிஷ்த்வார் நகரில் கடந்த திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது தலா ஒரு மணி நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது' என்றார்.
இதனிடையே, அதிகாரிகள் கூறுகையில் பதேர்வா நகரிலும் அதன் அண்டை மாவட்டமான தோடாவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டதாகத் தெரிவித்தனர். ராம்பன், பூஞ்ச், ரஜௌரி மாவட்டங்களில் நிலைமை இயல்பாக உள்ளதாகவும் அமைதியைப் பராமரிக்க பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிய அளவில் போராட்டங்கள்: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கண்டித்து மிகக் குறைந்த அளவிலான போராட்டங்களே காஷ்மீரில் நடைபெற்றதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் மட்டும் சிறிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அதிலும் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றதாக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று அவர் 
தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தேசம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது: அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு
இயல்பு நிலைக்கு திரும்பியது எய்ம்ஸ்!
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ஒரு தரப்பை திருப்திப்படுத்த அரசியல் நடத்தியதே தேசப் பிரிவினைக்கு காரணம்: அமித் ஷா
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் எடியூரப்பா