சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 4 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
பிஜாப்பூரின் சில்காபள்ளி கிராமத்துக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியில் சிஆர்பிஎஃப் படைப்பிரிவின் "கோப்ரா' படைவீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குப் பதுங்கியிருந்த நக்ஸல்கள் ஓயம் முட்டா (40), புணேம் சன்னு (37), அனில் மத்காம் (22), குஞ்சம் மாரா ( 45) ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
திமாபூர் பகுதியில் இயங்கிவரும் மாவோயிஸ்ட் பிரிவின் தலைவராக இருக்கும் ஓயம் முட்டாவை காவல்துறையினர் நீண்ட காலமாக தேடி வந்தனர். அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் 4 பேரும், ரோந்துப் பணியில் உள்ள காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவது, ரோந்து வாகனங்கள் செல்லும் பாதையில் சிறிய ரக குண்டுகளை வெடிக்கச் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.