சமாஜவாதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய சஞ்சய் சேத், சுரேந்திர சிங் நாகர் ஆகியோர் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்வதாக அண்மையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சமாஜவாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான சஞ்சய் சேத், சுரேந்திர சிங் நாகர் ஆகியோர், கட்சி நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து பாராட்டிப் பேசினர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததுடன், சமாஜவாதி கட்சியில் இருந்தும் விலகினர்.
இந்நிலையில், தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் அவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக பூபேந்தர் யாதவ் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறந்த அரசியல் தலைவராக சுரேந்திர சிங் நாகர் திகழ்கிறார். சஞ்சய் சேத், சமாஜவாதி கட்சியின் பொருளாளராக பதவி வகித்தவர். இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தது கட்சியை மேலும் வலுப்படுத்த உதவும்' என்றார்.
சஞ்சய் சேத், சுரேந்திர சிங் நாகர் ஆகியோர் ராஜிநாமா செய்ததால், காலியான எம்.பி. பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. அந்த இடங்களுக்கு இவர்கள் இருவரையும் பாஜக முன்னிறுத்தும் என்று கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.