உன்னாவ் இளம்பெண்ணின் தந்தை உயிரிழந்த வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் பெயரை சிபிஐ வேண்டுமென்றே சேர்க்கவில்லை என இளம்பெண் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பதின்வயதுப் பெண் ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பதின்வயதுப் பெண்ணின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக செங்கரின் சகோதரர் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பதின்வயதுப் பெண்ணின் தந்தை, காவலில் இருந்தபோது கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, செங்கர் கைது செய்யப்பட்டு, உத்தரப் பிரதேசத்திலுள்ள சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்தப் பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணையை உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை தினசரி அடிப்படையில் 45 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை விடுமுறை என்றபோதும், தில்லி உயர்நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று தில்லி மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன் சிறப்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது, பதின்வயதுப் பெண் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தர்மேந்திர மிஸ்ரா, பூனம் கெளசிக் ஆகியோர் வாதிடுகையில், ""செங்கரும், அவரது சகோதரரும் பொய் வழக்குத் தொடுத்து பதின்வயதுப் பெண்ணின் தந்தையைக் கைது செய்ய வைத்தனர். விசாரணைக் காவலில் இருந்தபோது, அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை. இது தொடர்பான குற்றப் பத்திரிகையில் எம்எல்ஏ செங்கரின் பெயரை வேண்டுமென்றே சிபிஐ விடுவித்துள்ளது'' என்று வாதிட்டனர்.
விசாரணை நிறைவடையவில்லை: இதைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அசோக் பர்தேந்து வாதிட்டதாவது:
எதிர்தரப்பு வழக்குரைஞரின் வாதத்தை ஏற்க முடியாது. பதின்வயதுப் பெண்ணின் தந்தை உயிரிழந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரணை நடத்தினோம். இதில், செங்கருக்கும் அவரது சகோதரருக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே, சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் அவர்களது பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், அவர்கள் இருவருக்கும் எதிராக ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில், கூடுதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம் என்றார் அசோக் பர்தேந்து.
தீர்ப்பு ஒத்திவைப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பதின்வயதுப் பெண்ணின் தந்தை மீது பொய் வழக்கு சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, நீதிபதி கூறுகையில், ""தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பதின்வயதுப் பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பும், இன்னபிற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது திருப்தியளிக்கிறது'' என்றார்.