பாக்டீரியா பரவுதலைக் கண்டறியும் கையடக்கக் கருவி: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

உடலில் பாக்டீரியா பரவுதலைக் கண்டறியும் குறைந்த செலவிலான, எளிய கையடக்கக் கருவியை அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவாஹாட்டியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின்
பாக்டீரியா பரவுதலைக் கண்டறியும் கையடக்கக் கருவி: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


உடலில் பாக்டீரியா பரவுதலைக் கண்டறியும் குறைந்த செலவிலான, எளிய கையடக்கக் கருவியை அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவாஹாட்டியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மனிதர்களின் உடலில் நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களும், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன. சில சூழ்நிலைகளில் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் பெருகி நோயை உண்டாக்குகின்றன. தற்போதைய நிலையில், நோயைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய காலதாமதமும், அதிக அளவிலான செலவும் ஏற்படுகிறது. எனவே, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியிலுள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் இதற்குத் தகுந்த தீர்வைக் கண்டுள்ளனர்.
இது தொடர்பாக, அந்தக் கல்லூரிப் பேராசிரியர் கே. பரமேஸ்வர் ஐயர் கூறியதாவது:
உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படவும், மரணங்கள் ஏற்படவும் பாக்டீரியா தொற்று காரணமாக அமைகிறது. தற்போதைய சூழலில், பாக்டீரியா மூலம் ஏற்படும் நோயைக் கண்டறிவதிலேயே காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. முதலில் நோயாளியின் உடலில் இருந்து பாக்டீரியா மாதிரிகளை எடுத்து, அதை பரிசோதனைக் கூடத்தில் வளர வைக்க வேண்டும். அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தால் மட்டுமே, அதனால் ஏற்படும் நோயின் தன்மையைக் கண்டறிய முடியும்.
இந்த நடைமுறையானது, செலவு மிகுந்ததும் ஆகும். இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே இது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ள முடியும். எனவே, பாக்டீரியா தொற்றை எளிய முறையில் கண்டறிவதற்கான கையடக்கக் கருவியை உருவாக்க நாங்கள் முயற்சித்தோம்.
சென்சார் அடங்கிய கருவி: பாக்டீரியாக்களின் செல் சுவரில் மின்சுமை காணப்படும். உடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களிலும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலும் மின்சுமையின் அளவு வேறுபட்டுக் காணப்படும். இந்த மின்சுமையை அளவிடும் சென்சார் அடங்கிய மின்னணுக் கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 
பாக்டீரியாக்களின் செல் சுவரில் உள்ள மின்சுமைக்கு ஏற்ப இந்தக் கருவியில் மின்னோட்டம் தூண்டப்படும். தூண்டப்படும் மின்னோட்டத்தை இந்தக் கருவி பதிவு செய்துகொள்ளும். இதன் மூலம், உடலில் பாக்டீரியா பரவுவதை விரைவில் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, இதன் விலை மிகவும் குறைவாகும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியவும், கருவுறுதலை எளிய முறையில் கண்டறியவும் கையடக்கக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பாக்டீரியாக்களின் பரவலைக் கண்டறியும் வகையில் இந்தக் கையடக்கக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் பரமேஸ்வர் ஐயர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com