வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்: சீனாவிடம் இந்திய வெளியுறவுத்துறை செயலர் வலியுறுத்தல்

DIN | Published: 23rd April 2019 01:41 AM


மசூத் அஸாரை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா உதவ வேண்டும் என சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ உடன் நடைபெற்ற  பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தினார். 
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவரான மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. இதுவரை 4 முறை இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆதரவளித்த போதிலும், சீனா அதை நிராகரித்து விட்டது. எனவே,  வரும் நாள்களில் மீண்டும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், மீண்டும்  இந்தியா சார்பில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே கோரிக்கை விடுத்தார். மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் இந்தியாவின் தீர்மானத்துக்கு, சீனா தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 
சீனா சென்றுள்ள விஜய் கோகலே, வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதனை வலியுறுத்தினார். 
அப்போது அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வூஹான் உச்சிமாநாட்டின்போது, நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இருநாடுகளின் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 
சீனாவுடன் இணைந்து பணியாற்றும்போது நம்மிடையே ஆழ்ந்த புரிதலுடன், ஒற்றுமை உணர்வும் மேலோங்குவதால், மேற்கொள்ளப்படும் முடிவுகள் வலுவானதாகவும் இருக்கும். இந்தியாவும், சீனாவும் உணர்வுபூர்வமான நாடுகளாக மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் அக்கறை கொண்ட நாடுகளாகவும் திகழ்கின்றன என்றார். 
மேலும், பாகிஸ்தான்-சீனா நாடுகளுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள பொருளாதார வழித்தடம் மற்றும் பிஆர்ஐ வழித்தடம் தொடர்பாகவும் தனது அதிருப்தியை இந்தியா தெரிவித்தது. 
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, துணை அமைச்சர் காங் ஜுவான்யூவிடமும் கோகலே பேச்சுவார்த்தை நடத்தினார். 
இருதரப்பு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாக சீன வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 
மசூத் அஸார் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா உறுதி: 
பேச்சுவார்த்தை குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தில்லியில் கூறியதாவது: தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் விவகாரத்தை இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே எழுப்பினார். 
மேலும், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான ஆதாரங்களையும் சீனாவிடம், சமர்ப்பித்த விஜய் கோகலே, அவரது இயக்கம் நடத்திய பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களையும் சீனாவிடம் அளித்தார். 
மசூத் அஸார் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதாக சீனாதரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் ரவீஷ்குமார் தெரிவித்தார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் எளிமையாக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 
காஷ்மீருக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை வரவழைத்திருக்கும் பாகிஸ்தான்: தகவல்
அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்துக்குக் கிடைத்தது இடைக்கால ஜாமீன்
ஆக.,26 வரை உத்தரவு பிறப்பிக்க முடியாது: சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு திங்களுக்கு ஒத்திவைப்பு
சிபிஐ காவலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் புதிய மனு