செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு?

DIN | Published: 23rd April 2019 01:38 AM


அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டுள்ள ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ளும் சூழலில் உள்ளன. இதில் ஜப்பான், தென்கொரியா ஆகியவை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாகும்.
கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தகத்தை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
அதனை  மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது. ஏற்கெனவே, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை சந்தித்து வரும் இந்தியாவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியது. ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கைவிட முடியாது என்றும், அதை வழக்கம்போல தொடரப் போவதாகவும் இந்தியா அறிவித்தது.
அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தது. மற்றொரு புறம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என அறிவித்தன.  இத்தகைய சூழலில்,  ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையில் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த காலக்கெடு அடுத்த மாதம் 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த விஷயத்தில் அமெரிக்கா என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சக வட்டாரங்களை மேற்கொள்காட்டி ஏபி செய்தி நிறுவனம் கூறுகையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையில் இருந்து இந்தியா, தென்கொரியா, ஜப்பான், சீனா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு இதற்கு மேலும் தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்த 5 நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை பாயும் என்ற அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இதற்கு இசைவு தெரிவித்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இத்தாலி, கிரீஸ், தைவான் ஆகிய நாடுகள் ஏற்கெனவே இறக்குமதியை நிறுத்திவிட்டன. 
உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலியத் தேவைக்கு அரபு நாடுகளை சார்ந்தே நமது நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக ஈரானிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டொன்றுக்கு 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் அந்நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் மத்திய அரசின் பங்களிப்பு இல்லை
அயோத்தி வழக்கு: திங்கள்கிழமை விசாரணை திடீர் ஒத்திவைப்பு
மகாராஷ்டிரத்தில் விபத்து: 13 பேர் பலி
இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
நீதிமன்றத்தில் விரைவில் சரண்: அனந்த் சிங் எம்எல்ஏ