'மீ டூ'  பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜிநாமா 

'மீ டூ'  பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் காரணமாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 
'மீ டூ'  பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜிநாமா 

புது தில்லி: 'மீ டூ'  பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் காரணமாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், இதற்கு முன்னர் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஊடகத் துறையில் அவர் தீவிரமாக இயங்கியபோது பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எம்.ஜே. அக்பர் அளித்ததாகக் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சாட்டினர். இது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே.அக்பர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அரசு முறை பயணமாக அக்பர் நைஜீரியாவுக்கு சென்றிருந்தார். அவர், இந்தியாவுக்கு திரும்பியவுடன் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகிவந்தன. 

இதையடுத்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் உடனேயே தனது பதவியை அவர் ராஜிநாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியது. 

ஆனால் பின்னர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ராஜிநாமா செய்த  மத்திய அமைச்சர் அக்பர் அப்போது அறிக்கை ஒன்றை விடுத்தார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது. அனைத்தும் சித்தரிக்கப்பட்டது. அடிப்படை ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டுகள்.  என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.  

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாக பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது அவர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில் புதனன்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். 

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். 

நாட்டுக்கு சேவை செய்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com