சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மேக்கேதாட்டு: மத்திய, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

DIN | Published: 06th December 2018 04:16 AM

மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக மத்திய, கர்நாடக அரசு உயரதிகாரிகள், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. 
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில்அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான முன்சாத்தியக் கூறு அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது. இதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது.
இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் திட்ட மதிப்பீடு ஆணையத்தின் (தெற்கு) இயக்குநர் என். முகர்ஜி, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன், கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகமின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜுனா பி. குங்கே, கர்நாடக அரசின் நீர்வளத் துறையின் முதன்மைச் செயலர் ராகேஷ் சிங், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
உச்சநீதிமன்றம் கடந்த 2018, பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007, பிப்ரவரி 5-ஆம் தேதி எடுத்த முடிவை உறுதி செய்துள்ளது. இந்த இறுதித் தீர்ப்பை வேண்டுமென்றே எதிர்மனுதாரர்கள் அவமதித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். மேற்கண்ட அனுமதி தொடர்பாக 22-ஆம் தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெற மத்திய நீர் ஆணையம் திட்ட மதிப்பீட்டு இயக்கத்தின் (தெற்கு) இயக்குநர் என். முகர்ஜிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த வாரம் விசாரணை: இந்நிலையில், மேக்கேதாட்டு அணை தொடர்பாக ஆய்வு நடத்த கர்நாடகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதிக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் ஜி. உமாபதி புதன்கிழமை முறையிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த மனு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

More from the section

பாக். அரசுக் கட்டுப்பாட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையகம்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி: மத்திய உள்துறை அமைச்சகம்
காங்கிரஸ் தொண்டர்கள் கொலை சம்பவத்தில் கடும் நடவடிக்கை: பினராயி விஜயன்
இந்தியா உபரி நதிநீரை நிறுத்துவதால் கவலை இல்லை: பாகிஸ்தான்
நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதிக்கவில்லை: உச்சநீதிமன்றம்