வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தன்னை முன்னிறுத்துவதே மோடியின் நோக்கம்: ராகுல் தாக்கு

DIN | Published: 06th December 2018 01:12 AM


மற்றவர்கள் மீது குற்றம்சாட்டி தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சீக்கியர்களின் புனிதத்தலம் அமைத்துள்ள கர்தார்பூர் பகுதி பாகிஸ்தானுக்குச் செல்ல காங்கிரஸ் தலைவர்களின்அலட்சியம்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் புதன்கிழமை இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது:
கர்தார்பூர் பகுதி பாகிஸ்தானுக்கு சென்றது குறித்து தேசத்தை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் பலரை மோடி குற்றம்சாட்டியுள்ளார். அந்த நேரத்தில் இருந்த தேசத் தலைவர்களுக்கு போதிய தொலைநோக்குப் பார்வையும், செயல்திறனும் இல்லை என்று அவர் குறை கூறியுள்ளார். மற்றவர்களை குற்றம்சாட்டி தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் குணமுடையவர் பிரதமர் மோடி. இப்போது, காந்தி, படேல் உள்ளிட்ட தேசத் தலைவர்களையும் அவர் குறை கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
உத்தர் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் நடைபெற்ற வன்முறை குறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது:
புலந்த்சாஹரில் காவல் துறை அதிகாரி ஒருவர் கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது அவமானத்துக்கும், வேதனைக்கும் உரியது. மத்தியில் பிரதமர் மோடியும், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகக் கூறி வருகின்றனர். இப்போது புலந்த்சாஹரில் நிகழ்ந்திருப்பது பயங்கரவாத செயல் இல்லாமல் வேறு என்ன?. போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு ஒரு கும்பல் சென்றுள்ளது என்றால் அவர்கள் பயங்கரவாதிகள் இல்லாமல் வேறு யார்? இந்த வன்முறைக்கு காரணம் என்ன? இதனை யார் துண்டிவிட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதான் மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

More from the section

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!
புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்