வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

சோனியா, ராகுலுக்கு எதிரான உத்தரவு அரசுக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

DIN | Published: 06th December 2018 01:18 AM


ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது வருமான வரிக்கணக்கு விவரங்களை மறுஆய்வு செய்ய வருமானவரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப்பது மத்திய அரசுக்கான வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தேநீர் விற்பனையாளர் செயலில் இருந்த துணிவுதான் அவர்களை நீதிமன்றத்தின் கதவுகள் முன்னே நிறுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக பாலி, தெளஸா உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி புதன்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது, நேஷனல் ஹெரால்டு முறைக்கு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு அவர் பேசினார். மோடி கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை கிடைத்த வெற்றி என்பது நேர்மைக்கு கிடைத்திருக்கும் வெற்றி. நீங்கள் (சோனியா, ராகுல்) இப்போது எப்படி தப்பிக்கிறீர்கள் என பார்க்கலாம்? நாட்டை நான்கு தலைமுறைகளாக வழிநடத்திச் சென்ற குடும்பத்தை நீதிமன்றத்தின் கதவுகளின் முன்னால் நிறுத்திய தேநீர் விற்பனையாளரின் துணிவு என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலை துபையில் இருந்து இந்தியாவுக்கு அரசு கொண்டு வந்திருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு சேவை செய்தவர் அவர். இப்போது பல ரகசியங்களை சொல்லப் போகிறார். இது எந்த அளவுக்கு செல்லப் போகிறது என்பதை பார்க்கலாம்.
ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இப்போது நடுக்கம் ஏற்பட்டிருக்கும். இத்தனை காலம் ரகசியங்களை மறைத்து வைத்திருந்த நபர் (மிஷெல்) இப்போது யார், யாருடைய பெயரையெல்லாம் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை. இது பல்லாயிரம் கோடி மதிப்புடைய விஷயம். இதனால், அவர்கள் பீதியில் இருப்பார்கள்.
குழம்பிய தலைமை: விடுதலை வீரர் கும்பராமிற்கும், கும்பகர்ணனுக்கும் உள்ள வித்தியாசம் கூட அவர்களுக்கு (ராகுல்) தெரியவில்லை. இத்தகைய குழப்பம் மிகுந்த தலைமை நாட்டுக்கு நல்லதல்ல. அந்தக் கட்சிக்கு தலைவரும் இல்லை; கொள்கையும் இல்லை; இலக்கும் இல்லை.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ தோற்றுவிட்டது. இப்போது தோல்விக்கு யாரை பொறுப்பாக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
ராஜஸ்தானில் பாஜகவின் கதை முடிவுக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் கருதிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது உள்கட்சிப் பூசல் காரணமாகவும், அதிருப்தி வேட்பாளர்கள் காரணமாகவும் தங்களுக்கு தோல்வி ஏற்படலாம் என்று அக்கட்சி சொல்லத் தொடங்கிவிட்டது.
நான்கு தலைமுறைகளாக வாரிசு ஆட்சியை மேற்கொண்டவர்கள், பழங்குடியின சமூகத்தினர் குறித்து கவலை கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எல்லாமே அந்த ஒரு குடும்பம்தான். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் 125 கோடி மக்களும் எங்கள் குடும்பம்தான்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இனி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றியை உறுதி செய்வதே நமது கடமை என்றார் மோடி.
விடுதலைப் போராட்ட வீரர் கும்பராமின் பெயரில் காங்கிரஸ் ஆட்சியின்போது தொடங்கப்பட்ட திட்டத்தை அண்மையில் குறிப்பிடும்போது கும்பகர்ணன் என்றார் ராகுல் காந்தி. அதை குறிப்பிடும் வகையிலேயே குழம்பிய தலைமை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
 

More from the section

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!
புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்