வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

கடனை திருப்பிச் செலுத்த தயார்: மல்லையா

DIN | Published: 06th December 2018 01:10 AM


நிதி மோசடியாளராக குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் தனக்கு நிலுவையில் உள்ள கடனில் 100 சதவீத அசல் தொகையை திருப்பிச் செலுத்த தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதை அவர் ஏற்கெனவே கூறியிருக்கிறார். ஆனால், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்த வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ள சூழலில், கடனை அடைக்கத் தயார் என மீண்டும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, நான் திருப்பிச் செலுத்தும் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகளையும், இந்திய அரசையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கெஞ்சும் தொனியில் மல்லையா தெரிவித்திருக்கிறார்.
ஊழல், நிதிமோசடி போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் நபர்களை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டவர் எனக் கருதப்படும், பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார்.
இதேபோன்று வங்கிக் கடன் மோசடியாளர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி போன்ற தொழிலதிபர்களையும் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ரூ.9,000 கோடி அளவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான அந்நிறுவனத்தின் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். அங்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட அவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 
அதே சமயம், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு நடத்தி வருகிறது. இந்த வழக்கில் வரும் 10-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. மல்லையா மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதால், அவரை நாடு கடத்தும் வகையிலேயே தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுவிட்டரில் கோரிக்கை: இத்தகைய சூழலில், வங்கிகள் மற்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், புதன்கிழமை டுவிட்டரில் ( சுட்டுரை) தொடர்ச்சியான பதிவுகளை மல்லையா வெளியிட்டார். அந்தப் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:
விமானங்களை இயக்குவதற்கான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கிங்பிஷர் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களாக விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், கிங்பிஷர் நிறுவனத்துக்கு இழப்புகள் ஏற்பட்டன. வங்கிகளில் கடனாகப் பெற்ற பணமெல்லாம் அதிலேயே சென்றுவிட்டது. 
இருப்பினும், கடனுக்குரிய 100 சதவீத அசல் தொகையை திருப்பிச் செலுத்த நான் தயாராகவே இருக்கிறேன். தயவுசெய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
குற்றவாளியாக்க வேண்டாம்: பொதுத்துறை வங்கிப் பணத்துடன் ஓடிப் போன மோசடியாளர் என்ற குற்றச்சாட்டை அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் எனக்கு எதிராக உரக்கச் சொல்கின்றனர். அவையனைத்தும் பொய்யானவை. கடனை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான் கூறியிருப்பதையும் ஏன் உரக்கச் சொல்லவில்லை? அதில், ஏன் என்னை நியாயமாக நடத்தவில்லை?
என்னை நாடு கடத்தும் விவகாரத்தில் ஊடகங்கள் விரைவாக தீர்ப்பு எழுதுவதைப் பார்க்க முடிகிறது. அது தனிப்பட்ட விவகாரம். அதில், சட்டம் அதன் கடமையைச் செய்யும். ஆனால், பொதுத்துறை வங்கிப் பணம்தான் முக்கியமான விஷயம். அதில் 100 சதவீத அசலை திருப்பிச் செலுத்த நான் தயாராக இருக்கிறேன். அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வங்கிகளையும், இந்திய அரசையும் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று மல்லையா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய பொதுத்துறை வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை கைப்பற்றுவதற்கு பிரிட்டன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேசமயம், மல்லையாவை இந்தியா கொண்டு வரும் பட்சத்தில் மும்பையில் உள்ள சிறையில் அவரை அடைப்பதற்கும், அதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கும் மத்திய அரசு சார்பில் முன்னேற்பாட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

More from the section

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!
புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்