வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

கங்கை நதி தூய்மைக்கான மக்களின் கனவு விரைவில் நிறைவேறும்: நிதின் கட்கரி

DIN | Published: 06th December 2018 01:19 AM
தில்லி விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியா தண்ணீர் விளைவு உச்சிமாநாட்டை தொடக்கி வைத்து பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.


கங்கை நதி தூய்மைக்கான மக்களின் கனவு விரைவில் நிறைவேறும் என்று மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தேசிய தூய்மை கங்கை திட்டம் மற்றும் கங்கை நதி படுகை மேலாண்மை மற்றும் ஆய்வு மையம் சார்பில் தில்லியில் இந்தியா தண்ணீர் விளைவு உச்சிமாநாடு புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
அனைத்துப் பங்குதாரர்களின் ஆதரவுடன் தூய்மை கங்கை திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும், திட்டப் பணியின் பலன்கள் பார்வைக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. கங்கை நதியின் மாசுவுக்கு காரணமாக இருந்த சிசாமௌ கால்வாயின் பாதிப்பில் இருந்து கான்பூர் நகரம் விடுவிக்கப்பட்டுள்ளது. கங்கை தூய்மைத் திட்டப் பணிகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துகள் வரப் பெறுகின்றன. இதனால், கங்கை நதி தூய்மைக்கான மக்களின் கனவு விரைவில் நிறைவேறும்.
கங்கை நதி தூய்மைத் திட்டம் தொடங்கிய ஆண்டு முதல் (1985) தற்போது வரை மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நமாமி கங்கை திட்டம் தொடங்கப்பட்டவுடன் 5 ஆண்டுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கமானது, 254 திட்டங்களுக்காக ரூ.24 ஆயிரம் கோடிக்கும் மேல் அனுமதி அளித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நல்ல பலன்களும் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. கங்கையின் உப நதிகளான யமுனை, சராயு, ராம் கங்கை, கோமதி, காளி, கோசி, கண்டக், தாமோதர் போன்றவை தொடர்பான 26 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசுகையில், தூய்மை கங்கை திட்டமானது மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உதவும் வகையில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களை உருவாக்குவது, திரவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது ஆகியற்றுக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் காரணமாக கங்கை நதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகள் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அடைந்து வருகின்றன என்றார்.
கங்கை புனரமைப்புப் பணிக்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சத்ய பால் சிங் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை செயலர் யு.பி. சிங், கானா நாட்டின் நீர்வளத் துறை அமைச்சர் செசிலியா அபெனா தபா உள்பட பலர் பங்கேற்றனர். 
மாநாட்டில், நிகழாண்டில் கங்கை நதி படுகை புனரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நாட்டில் நிலவி வரும் தண்ணீர் தொடர்புடைய சில முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக விவாதம் இடம் பெறுகிறது. மேலும், காடு வளர்ப்பு, பல்லுயிர்ப் பெருக்கம், நகர்ப்புற நதி, நீர் மேலாண்மை திட்டங்கள், கங்கை புனரமைப்பு திட்டத்திற்கு நிதி வசதி அளிப்பதற்கான உலகளாவிய சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவை தொடர்பான அமர்வுகளும் மாநாட்டில் இடம் பெறுகின்றன.


காவிரி விவகாரம் உணர்வுப்பூர்வமானது
காவிரி விவகாரம் உணர்வுப்பூர்வமானைது என்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சத்ய பால் சிங் கூறினார்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிதாக அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் அமைப்புக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், காவிரி விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. இது பற்றி நன்கு தெரிந்த பிறகே பதில் அளிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறையின் செயலரிடம்தான் நீங்கள் விவரம் கேட்க வேண்டும் என்றார்.


 

More from the section

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!
புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்