வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

எனக்கு எதிராக அரசியல் தாக்குதல்கள்: ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு

DIN | Published: 06th December 2018 01:00 AM

தன் மீது அரசியல் தாக்குதல்கள் தொடர்கின்றன என்றும், தன் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்த அரசுத் துறைகள் முயல்கின்றன என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குற்றம் சாட்டியுள்ளார்.
பிகானீர் நில பேர வழக்கு விசாரணைக்காக, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ராபர்ட் வதேரா நேரில் ஆஜராக அமலாக்கத் துறை கடந்த மாதம் 30-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது.
இது குறித்து, வதேரா முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது:
எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்த அரசுத் துறைகள் முயல்கின்றன. அதைக் கருத்தில்கொண்டே என் மீது அரசியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசுத் துறைகளுக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளேன். அதே ஆவணங்களை அரசுத் துறைகள் மீண்டும் கேட்டன.
அதையடுத்து, சுமார் 600 ஆவணங்கள் வழக்குரைஞர் வாயிலாகத் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது, விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், என் வழக்குரைஞர் புதன்கிழமை(டிச.5) நேரில் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, வதேராவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு, பிகானீரில் உள்ள சுமார் 110 ஏக்கர் நிலம் மிகக் குறைந்த விலைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நிலத்தை மிக அதிக விலைக்கு விற்று அந்நிறுவனம் லாபம் ஈட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. போலி ஆவணங்களின் மூலம் இந்த முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கினை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
 

More from the section

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!
புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்