சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

இந்தியாவுக்கு எதிராக தலிபானை பயன்படுத்துகிறது பாகிஸ்தான்: அமெரிக்கா

DIN | Published: 06th December 2018 01:09 AM


இந்தியாவுக்கு எதிராக தலிபான்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்ற செனட் ராணுவ சேவைகள் குழுவிடம் அந்நாட்டு கடற்படை தளபதி கென்னத் மெக்கன்ஸி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தலிபான்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இதை நாம் தொடர்ந்து பார்க்க போகிறோம். தலிபான்களை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்களை அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த பாகிஸ்தான் முக்கியப் பங்காற்ற முடியும். ஆனால், அதை அந்நாடு செய்வதில்லை.
சில பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாலும், அதை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். ஆப்கன் அரசுடன் தலிபான்களை சமரசம் செய்து வைக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை. அந்நாடு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை தொடர்ந்து பாதிக்கப்படும்.
ஆப்கனுக்கு எந்தவொரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமானாலும் அதற்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படும். பிராந்திய அளவிலான தீர்வாகவே அது அமைய வேண்டும்.
ஆனால், அதற்கு பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை என்று கருதுகிறேன் என்றார் கென்னத் மெக்கன்ஸி.
கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் களமிறங்கி பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சி இறங்கியது. இதுவரை 2,400 அமெரிக்க வீரர்கள் இதில் உயிரிழந்துவிட்டனர்.
அதே 2001-ஆம் ஆண்டில் தலிபான்களை அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்து ராணுவ நடவடிக்கை மூலம் அகற்றியது.
தற்போது, தலிபான் பயங்கரவாத அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
 

More from the section

காங்கிரஸ் தொண்டர்கள் கொலை சம்பவத்தில் கடும் நடவடிக்கை: பினராயி விஜயன்
இந்தியா உபரி நதிநீரை நிறுத்துவதால் கவலை இல்லை: பாகிஸ்தான்
வாக்குப் பதிவு இயந்திரங்களில் மென்பொருள்: தேர்தல் ஆணையத்திடம் பதில் கோரியது உச்சநீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல்: ப.சிதம்பரத்துக்கு எதிராக விரைவில் சிபிஐ குற்றப்பத்திரிகை
நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதிக்கவில்லை: உச்சநீதிமன்றம்