வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

இடைத்தரகர் மிஷெலுக்கு ஆதரவாக ஆஜரான காங்கிரஸ் பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

DIN | Published: 06th December 2018 02:41 AM


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான காங்கிரஸைச் சேர்ந்த வழக்குரைஞர், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணைக்காக, துபையிலிருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை நாடு கடத்தி வரப்பட்ட மிஷெல், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்காக அல்ஜோ கே ஜோசப் என்ற வழக்குரைஞர் ஆஜரானார். இவர், இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஆவார். இதனை குறிப்பிட்டு, பாஜக விமர்சித்தது. 
இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிறிஸ்டியன் மிஷெலுக்காக ஆஜராகும் முடிவை, அல்ஜோ கே ஜோசப் தன்னிச்சையாக எடுத்துள்ளார். கட்சியுடன் இதுதொடர்பாக எந்த ஆலோசனையும் அவர் மேற்கொள்ளவில்லை. இத்தகைய செயல்களை, இளைஞர் காங்கிரஸ் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. தனது முடிவு குறித்து ஜோசப் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததால், இளைஞர் அணியின் சட்டப் பிரிவில் இருந்தும், கட்சியிலிருந்தும் அவர் உடனடியாக நீக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்தபோதிலும், அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கைகளில் ஜோசப் தீவிரமாக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
 

More from the section

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!
புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்