பசி அதிகமாக இருக்கும் போது இதையெல்லாம் செய்யாதீங்க!

ஒரு புதிய வேலைக்காகவோ, முக்கியமான வணிக ஒப்பந்தம் செய்யவோ அல்லது சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை
பெஞ்சமின் வின்சென்ட்
பெஞ்சமின் வின்சென்ட்

ஒரு புதிய வேலைக்காகவோ, முக்கியமான வணிக ஒப்பந்தம் செய்யவோ அல்லது சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தவோ நீங்கள் சாப்பிடாமல் கிளம்பிச் செல்கிறீர்கள் எனில் ஒரு நிமிடம் ப்ளீஸ். இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவும். வெறும் வயிற்றில் நீங்கள் ஒருபோதும் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருங்கள். இதைத்தான் அண்மையில் நடந்த ஒரு புதிய ஆராய்ச்சியும் பரிந்துரைக்கிறது.

பசியுணர்வு மனிதர்கள் முடிவெடுப்பதை கணிசமாக மாற்றி அமைக்கிறது, இதனால் அவர்கள் பொறுமையிழந்து, சிறிய வெகுமதிகளில் மகிழ்வடைந்து எதிர்காலத்தில்  கிடைக்கக் கூடிய பெரிய வாய்ப்புக்களை இழந்து விடலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மக்கள் பொதுவாக பசியுடன் இருக்கும்போது உணவுப் பொருட்களை வாங்க கடைக்குச் செல்லக் கூடாது என்று பலருக்கும் தெரிந்ததுதான். காரணம் அவர்கள் ஆரோக்கியமற்ற அல்லது விரும்பத்தகாத உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது. பசியாக இருக்கும் போது அவர்களின் மற்ற முடிவுகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எங்கள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது,' என்றார் பிரிட்டனில் உள்ள டன்டீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் வின்சென்ட்.

'நீங்கள் ஒரு ஓய்வூதியம் அல்லது நிதி ஆலோசகருடன் பேசப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், பசியுடன் இருக்கும்போது அவ்வாறு செய்வது அப்போதைக்கு மனநிறைவு தரும் முடிவாக இருக்குமே தவிர எதிர்காலப் பயன் கருதி இன்னும் யோசித்து முடிவெடுத்திருக்கலாம் என்று பின்னர் நினைத்து வருந்தக் கூடியதாக இருக்கும்" என்று வின்சென்ட் கூறினார்.

ஆய்வு முடிவுகள் : வின்சென்ட் வடிவமைத்த அந்த பரிசோதனையில் பங்கேற்பாளர்களுக்கு உணவு, பணம் மற்றும் பிற வெகுமதிகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. பசித்திருந்தவர்கள் விரைவில் வந்த ஒருசில சிறிய உணவு ஊக்கத் தொகைகள் போதுமென முடிவெடுத்தனர். இப்படிப்பட்ட தீர்வை அவர்கள் எடுப்பது ஆச்சரியமல்ல என்றாலும், பசியுடன் இருப்பது உண்மையில் உணவுடன் முற்றிலும் தொடர்பில்லாதவற்றிலும் கூட ஆதிக்கம் செலுத்தி விருப்பங்களை மாற்றிவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பசியுணர்வு மிகுந்திருக்கும் சமயங்களில் ஒருவர் ஒரு முடிவை எடுக்க நேரிடும் போது, அதிலும் குறிப்பாக வர்த்தகம் மற்றும் மனித உறவுகள் போன்றவற்றில் விரும்பத்தகாத வகையில் முடிவுகளை எடுக்கக் கூடும் என்பதை இது குறிக்கிறது.

வறுமை காரணமாக பட்டினியை அனுபவிக்கும் மக்கள் தங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் முடிவுகளை எடுக்கக்கூடும் ஆபத்தும் உள்ளது. 

பசியால் ஏற்படும் தாக்கம் எத்தகையது என்பதை நாங்கள் கண்டறிந்தோம், மக்களின் விருப்பத் தேர்வுகள் நீண்ட காலத்திலிருந்து குறுகிய காலத்திற்கு ஆச்சரியத்தக்க முறையில் மாறிவிடுகின்றன, என்று அவர் கூறினார்.

"இது மனித நடத்தையின் ஒரு அம்சமாகும், இது வியாபாரிகளால் எதிர்மறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும், எனவே பசியுடன் இருக்கும்போது தங்களின் விருப்பத்தேர்வுகள் மாறக்கூடும் என்பதை முதலில் மக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,’ என்று  வின்சென்ட் கூறினார்.

இந்த ஆய்வு முடிவுகள் சைக்கோனமிக் புல்லட்டின் & ரெவ்யூ எனும் இதழில் வெளியிடப்பட்டது.

இதைத்தான் நம் முன்னோர்கள் 'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று அன்றே கூறிவிட்டனர். அந்த பத்தும் என்ன என்பதை நீங்கள் ஒரு ஆராய்ச்சி செய்து (கூகிளில்தான்) தெரிந்து கொள்ளுங்கள்!

நன்றி : IANS

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com