பகுதி 9: உங்கள் குழந்தைகள் யாரை பிரதிபலிப்பார்கள்?

ஒரு குழந்தை அழ ஆரம்பித்ததும் பக்கத்தில் உள்ள குழந்தைகளும் கூடச் சேர்வது எதனாலே? 
பகுதி 9: உங்கள் குழந்தைகள் யாரை பிரதிபலிப்பார்கள்?

நம் எதிரில் வருவோரின் முகத்தில் புன்முறுவல் பார்த்ததும் நமக்கும் முகத்தில் சிரிப்புப் படர்ந்து வருகிறது. யாராவது தடுக்கி விழப் போவதைப் பார்த்தால் நாம் திடுக்கிட்டுத் உஷ் என்ற சப்தம் செய்வதும் வலியை உணர்ந்து உதவ முடிந்தால் அதை செய்வது. ஒருவர் தன் முன் வைத்த சாப்பாட்டைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டால் நமக்கும் சாப்பிடப் பிடிக்காமல் போவது. படத்தில் ஆழ்ந்த சோகத்தில் அழுதால், நம் கண்களிலும் கண்ணீர் வரும். சிரித்தால், சந்தோஷமாகி விடுவோம்! ஒரு குழந்தை அழ ஆரம்பித்ததும் பக்கத்தில் உள்ள குழந்தைகளும் கூடச் சேர்வது எதனாலே? 

குழந்தை தன் அம்மா-அப்பாவைப் போல் கைப்பேசியைப் பிடித்துப் பேசுவது, நீளத் துணியைக் கொண்டு முந்தானை போல் வைத்து அம்மா செய்வதெல்லாம் செய்வது. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். ஏன் மற்றவர்களை அப்படி ஒரு ஈ அடித்தான் காப்பி செய்கிற தன்மை நமக்கு, குறிப்பாகச்  சிறு குழந்தைகளுக்கு? இதற்கான விடையை இங்கே பார்க்கலாம். நகல் எடுப்பதும் 'மிரர் ந்யூரான்ஸும்!'

குழந்தைகள் பிறந்ததிலிருந்தே எந்த ஒரு புதிய செயலைப் பார்த்தாலும் அதை அவர்களின் கற்றுக் கொள்ளும் நகல் எடுக்கும் மூளையின் பாகத்தில் பதிவு ஆகிவிடும். தேவைப்படும் போது அப்படியே தானும் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் தன்மை பெரியவர்களான நமக்கும் பொருந்தும், சிறு குழந்தைகளுக்கு இது கற்றலின் மிக முக்கியமான பாதை. இதில் ஆவது என்னவென்றால் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களிடம் எதைப் பார்க்கிறார்களோ, அதை உடனே தானும் செய்து பார்த்து, அதிலிருந்து தன் ந்யூரான்ஸிள் (neurons) அந்தச் செய்முறைகளுக்கான சரியான பாதையை அமைத்துக் கொள்கின்றார்கள். செய்யச் செய்ய, பழக்கமாகி விடுகிறது, பிழை இல்லாமல் சுலபமாகத் தானாகச் செய்ய முடிகிறது. 

இது எப்படி செயல்படுகிறது? ஆராய்ச்சியாளர்கள் கண்டு அறிந்தது, குழந்தைகள் ஒரு செய்முறையைக் காண்கிற போது, அந்தக் கணத்திலேயே அவர்களின் மூளையின் ஒரு பாகம் செய்பவர் செய்வதை காணும் போது, தானும் உணர்வை உணர்ந்து, அவர் செய்யும் செயலைச் செய்யத் தன்னைத் தயாராக்கிக் கொள்கிறது. இதனால் மூளையின் அந்த பாகத்திற்கு 'மிரர் நியூரான்ஸ்' (mirror neurons) என்ற பெயர் சூட்டியுள்ளார்கள். அதாவது பார்ப்பவர்கள் செய்வதை நம்முடைய மூளைக்குக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல நிலைமையை உருவாக்கி விடுகிறது என்றே ஒப்பிடலாம். கண்ணாடி பிம்பம் போலவே நம் மூளை நாம் பார்ப்பதின் ஒவ்வொரு அசைவையும், சப்தம், மூச்சு போன்றவற்றையும்  நகல் எடுத்து விடுகிறது. பெரியவர்களான நமக்கு நம் மூளை தானாக அதைச் சேகரித்து வைத்து விடும், அந்த செயலை நாம் செய்ய முயலும் போது தன்னை அறியாமலேயே அதே போல் செய்வோம். குழந்தைகளுக்கு அந்த அசைவுகள் பழக்கம் இல்லாததால், பிறந்ததிலிருந்தே தான் காண்பதை உடனே செய்து பார்க்கும் தன்மை, அசைவுகளைப் பழக்கப் படுத்திக் கொள்ளும் தன்மை அவர்களுக்குள் அமைந்துள்ளது. 

'மிரர் நியூரான்ஸ்' என்று அழைப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு - ஒன்றைப்  பார்க்கும் போது, உள்வாங்கிக் கொள்ளும் போது அதன் விளைவுகள் தனக்கே நடப்பது போலத் தோன்றும், அவர்களின் உணர்ச்சிகளை நாமும் அனுபவிப்போம். இதிலிருந்து மற்றவர்களுக்கு நிகழ்வதை அவர்களின் கோணத்திலிருந்து புரிந்து கொள்ளும் தன்மை நமக்கு உருவாகிறது.

இந்த வித்தைகள் நமது மூளையின் இரண்டு இடங்களிலான ப்ரீமோடர் கார்டெக்ஸும் (premotor cortex) மற்றும் பெரைட்டல் லொபின் (parietal lobe) ஒரு பகுதியில் நடக்கிறது. அப்போதை உணர்வுகள் தோன்றுகிறதோ அனுபவம் ஏற்படும் போது நமக்குள் எந்த உணர்வுகள்தோன்றுகிறதோ, மறுபடியும் எப்பொழுதாவது அப்படியே நடக்க நேர்ந்தால் உடனே அதே உணர்வுகள்  நமக்குள் தோன்றும்.

குழந்தையும் மிரர் ந்யூரான்ஸும்

குழந்தைகள் மற்றவர்கள் உணர்வதைப் புரிந்து கொள்ள மிரர் ந்யூரான்ஸின் பெரிய பங்குண்டு. இதனால் தான் தனக்குள் உள்வாங்கி, உடனே செய்து பார்த்துக் கொள்ளும் கட்டம் ஏற்படுகிறது. அதனால்தான் அவர்களுடன் இருக்கும் போது என்ன உதாரணம் காட்டுகிறோம் என்பதில் நாம் அதிக கவனம் தர வேண்டும். குழந்தைகள் சரியானவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் சூழலும் அமைப்பது பராமரிப்பின் முக்கிய பொறுப்பாகும். 

நாம் இது வரை வலியுறுத்திச் சொன்னது பகுதி 8-ல் இப்போதே போடுங்கள் அஸ்திவாரம்!  இங்கேயும் பொருந்தும். குழந்தைகள் எதைப் பார்த்தாலோ, கேட்டாலோ, செய்தாலோ அவற்றை முழுதாகப் புரிந்து கொள்ளும் வரை அதையே மறுபடி மறுபடி முயன்று கற்றுக்கொள்வது அவர்கள் வழியாகும். மிரர் ந்யூரான்ஸ் மூலம் மூளையில் அது பதிவு ஆவதால் நன்மைகள் உண்டாகலாம், ஆனால் தேவையில்லாததையும் பின்பற்ற நேரிடலாம். 

பல குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் சேர்ந்த பின்னரும் மழலைப் பேச்சு நீடித்து இருக்கும். ஏன்? அவர்கள் வீட்டினர் குழந்தையிடம் பேசும் போது செல்லமாகப் பேசுவதாக நினைத்து மழலைப் பேச்சே உபயோகிப்பார்கள். குழந்தை தனது மிரர் ந்யூரான்ஸினால் அவர்கள் பேசுவதைப் போலவே பேசுவார்கள், உச்சரிப்பார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் இதில் குழந்தையும் அவர்களுடன் இருப்பவரின் மிரர் ந்யூரான்ஸூம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன! குழந்தையைப் பொறுத்தவரை இப்படித்தான், இந்த மழலைப் பேச்சுதான் பேச வேண்டும் என்ற எண்ணம், பள்ளிக்குப் போய் மற்றவர்கள் சரியாகப் பேசுவதைப் பார்த்த பிறகுதான் மெல்ல மெல்ல மாறுகிறது.

பெரியோர்கள் எப்போதும் நக்கலாகப் பேசுவது, கிண்டல் அடிப்பது என்ற பழக்கம் கொண்டிருந்தால், அந்த சூழலில் குழந்தைகளின் மிரர் ந்யூரான்ஸ் அதையே பதிந்து கொண்டு வளர வளர, அவர்கள் பேச்சில் மரியாதை குறைந்த வாசம் இருக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற போக்கில் அது பிற்காலத்திலும் நீடித்து விட வாய்ப்புண்டு.

அதே போல் எப்போதும் கோபம், சண்டைப் படங்கள் நிறைந்த கார்ட்டூன்கள் (உதாரணத்திற்கு ஆங்கரி பர்ட்ஸ் angry birds) காட்டினால், குழந்தைகள் அந்த செய்முறைகளை தங்களது ந்யூரான்ஸில் ஏற்றுச் செயல்படும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்குவதாகிவிடும். குடும்பத்திலேயே தினமும் சண்டை என்றால் கேட்கவே வேண்டாம், குழந்தை வார்த்தைகளில், சுபாவத்தில் இதன் பிரதிபலிப்பு நிறையவே இருக்கும். 

தினம்தோறும் மிரர் ந்யூரான்ஸும்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிரர் நியூரான்ஸ் எல்லா தொடர்புகளில் தென்படும். உதாரணத்திற்கு, ஒருவரைச் சிரித்த முகமாகப் பார்க்கையில் நம்முள் அதே உதயமாகிறது. அவர்கள் மூளையின் எந்த பாகத்தினால் இந்த உணர்வு புலப்படுகிறது அதே பாகம் நம்முடைய முளையிலும் ஆகும். அதனால்தான் குழந்தைகள் கோபப்படும் படங்களைப் பார்க்கப் பார்க்க அவர்கள் மூளை அந்த கோபம் மட்டுமே விழித்து இருக்கும். சூழலில் பதற்றம், கோபம், இருந்து வந்தால், குழந்தைகள் அந்த நிலையில் இருப்பார்கள். 

உருவாகப்படுத்தல்தான் இந்த மிரர் ந்யூரான்ஸ். மற்றவரின் செயல், உள்நோக்கம், உணர்வும். யாரைப் பார்த்து இந்த நகல் ஆகிறதோ அவர்கள் ஏன், எதற்காக அப்படித் தோன்றுகிறார் என்றது தெரியாமல் இருந்தாலும் நமக்கு உடனே உணர முடிகிறது அதை நம் உடலும் பங்கு கொள்கிறது.

குழந்தை வளர்ப்பும் மிரர் ந்யூரான்ஸும்

அதுவும் குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்குத் தென்பட்டதை, பார்த்ததை அப்படியே செய்து காண்பிக்கும் திறன், தன்மை, இரண்டும் இயற்கையாக அவர்களுக்கு உள்ளது. இதை நாம் அவர்களின் கற்பனை விளையாட்டில் பலமுறை பார்க்க நேர்கிறது. 

பாப்பாவாக இருக்கையில் நம் முக அசைவுகளைக் கூர்ந்து கவனித்து, கண்களை உருட்டுவதும், வாயை அஷ்டகோணமாக நாம் செய்ய, அவர்களும் முயல்வதும் இதன் அஸ்திவாரத் தருணங்கள். வளர வளர, கற்பனை விளையாட்டு, பாசாங்கு விளையாட்டு என்ற இரண்டுமே குழந்தைகள் தான் பார்ப்பதைத் திரும்பத் திரும்பச் செய்து பழகிக் கொள்ள உதவும் கருவிகள் ஆகும். இதனால்தான் குழந்தைகளுடன் இருப்பவர்கள் தாங்கள் செய்வதிலும், சொல்வதிலும் மிக கவனமாக இருப்பது அவசியம். குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டுக் கொள்வதை விட, செய்வதைப் பார்த்துக் கற்றுக் கொள்வது எவ்வளவோ அதிகம். 

நாம் எல்லோரும் பார்த்ததுதான், நாம் தேவையில்லாததைச் செய்தால், நிச்சயம் அதைக் கற்றுக் கொண்டு விடுவார்கள்! நாம் குழந்தைகளிடம் எந்த நல்ல பழக்கங்களை எதிர்பார்க்கிறோமோ, அதை முதலில் நாம் பின்பற்றுவது தான் முதல் படி. மேலும் மிக முக்கியமான ஒன்றும், மிரர் ந்யூரான்ஸ் ஆகும்போது, சிந்தனை உணர்வுடன் ஒன்று படுகின்றது. அந்த நிலையில் இவை இரண்டும் ஒன்றுபட்ட நிலையில் இருப்பதும் உண்டு. இதனாலையும் நம் மூளை இந்த நிலையை கவனமாக வைத்து கொள்கிறது. அதனால்தான் மறுபடியும் அதே ஒன்றை சந்திக்க நேர்ந்தால் நம் உடல் மனம் அப்படியே பின் நடந்நததை ஞாபக கூறி இப்போது நடப்பது போல் உணரும். ஒரே சில நிமிடங்களுக்கு. இது சந்தோஷங்கள், சோகங்கள், வேதனைகள் என ஏதுவாகவும் இருக்கலாம்.

மிரர் ந்யூரான்ஸும் குழந்தை வளர்ப்பும்

  • கூட இருப்பவரைப் போலவே குழந்தைகள் வளர்வார்கள். குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும், அது உங்களிடமிருந்து ஆரம்பமாகிறது. 

  • பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தையைப் பராமரிப்பவர்கள்: வார்த்தைகளில், செயல்களில் கவனமாக இருக்கவும். 

  • குழந்தைகளுக்கு வழிகாட்டுவதுதான் உதவும், கட்டுப்படுத்துவது அல்ல.

  • குழந்தைகளின் உணர்வை நாம் உணர்ந்து கொள்வது அவசியம், மற்றவர்களின் உணர்வை அவர்கள் உணர்ந்து கொள்வதும் அவசியம்.

  • வயதிற்கேற்றபடி, பல்வேறு செய்முறைகளை காண்பதற்கும், செய்து பார்ப்பதற்கும் வாய்ப்புகள் அமைத்திட வேண்டும்.

  • மற்றவர் செய்வதைப் பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள், செய்வார்கள். இதனால்தான் பள்ளிக்குச் சென்றவுடன், அங்கு மற்ற குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துப் பல செய்முறைகளைக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். நல்ல பழக்கங்கள் பல அமைக்க இது வாய்ப்பு.

இப்படித்தான் தான் எதிர்காலக் கற்றலுக்கு அஸ்திவாரம் இப்போதே போடத் தேவை. 

மிகச் சிறந்ததைப் பெற,

மிகச் சிறந்ததைக் கொடு!

மேலும் பார்ப்போம்…..

- மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்     malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com